Sunday 10 April 2016

தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல

 ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...' என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...' என்று சொல்பவன், சாதனையாளன். தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.

உண்மையில் தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

அதே போன்று தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம். ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும்.

நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?' என்பதே

பொதுவாக சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை. இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி, கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் (80களில்) தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது. ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.

மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை. "பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்...' என்று ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக் கொள்வார்கள். வாழ்வின் இறுதி வரை முயற்சிசெய்து கொண்டேயிருப்பார்கள்

எப்போதெல்லாம் நமக்கு பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், "அதனால் என்ன? அடுத்து என்ன? நல்ல வழி தானாகவே பிறக்கும்.

No comments:

Post a Comment