Wednesday 26 November 2014

வில்மா ரூடால்ப்

 வில்மா ரூடால்ப், வறுமையான குடும்பத்தில் பிறந்த இருபதாவது குழந்தை. அவள் குறை மாதத்தில் பிறந்தாள். வில்மா பிழைப்பாளா என்றே மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். அவளுக்கு 4 வயதானபோது, டபுள் நிமோனியா, போலியோ மற்றும் செங்காய்ச்சல் அவளைத் தாக்கியது. ஊன்றுகோல்கள் இல்லாமல் அவளால் நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் நினைத்தார்கள். அவளது சூம்பிப்போன இடது கால் அவளது நடையைப் பாதித்தது.

போலியோவை ஜெயித்த வில்மா

அவள் தனது உத்வேகத்தை இழக்கவேயில்லை. 9 வயதில், தனது காலில் மாட்டியிருந்த உலோக உறுப்புக் கவ்வியை நீக்கிவிட்டாள். அது இல்லாமலேயே நடக்கத் தொடங்கினாள். அவளது விடாமுயற்சியால் நம்மைப் போன்ற சீரான நடையை 13 வயதில் அவள் பெற்றாள். மருத்துவர்கள் அதை அற்புதம் என்றனர்.

அந்த ஆண்டே அவள் ஓட்டப் பந்தய வீராங்கனை ஆனாள். அவள் ஓடுவாள் என்று அந்த நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் அவள் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற மாட்டாள் என்று கருதினார்கள். அவள் பந்தயத்தில் பங்குபெற்றாள். கடைசியில் வந்தாள். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அவள் பங்குபெற்ற பந்தயங்களில் கடைசியாகவே வந்தாள். இந்த முயற்சியைக் கைவிடு என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் கூறினார்கள். ஆனால் அவள் ஓடிக்கொண்டேயிருந்தாள். ஒரு நாள் அவள் வென்றாள். அடுத்த போட்டியிலும் கலந்துகொண்டு வென்றாள். அடுத்துக் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியை விட வெற்றி அதிகமாயிற்று. அடுத்து எல்லாப் போட்டிகளிலும் வெல்லத் தொடங்கினாள்.

உலகின் வேகமான பெண்

வில்மா உடல் பலவீனத்துடன் குறைப் பிரசவத்தில் பிறந்தவள், நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டவள், ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெறுவது சாத்தியமேயில்லை என்று நம்பப்பட்டவள். அவள் 1960-ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். உலகின் வேகமான பெண் என்ற பெயரைப் பெற்றாள்.

ஒரு வெற்றியாளர் தோல்வியே காணாதவர் அல்ல... ஒருபோதும் பின்வாங்காதவர்! என்பதற்கான உதாரணமாக இது இருக்கிறது.

சராசரிகள்

வாழ்க்கையில் தாங்கள் இன்னும் கூடுதலாகத் தைரிய மான முடிவுகளை எடுத்திருக்க வேண்டும் என்பது மரணப் படுக்கையில் உள்ளவர்களின் மனக்குறையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதன் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எனக்குச் சிறிது நேரம் பிடித்தது.

ரிஸ்க் எடுத்துச் செயல்படாதது ஏன் ஒருவரை இத்தனை ஆயாசத்துக்கு உள்ளாக்குகிறது? நான் அதைப் பற்றி யோசித்தேன். கடைசியில் அதற்கான விடை தெரிந்தது. தைரியமான முடிவை எடுப்பதற்கு ஒரு தருணம் தேவை. அப்படி எடுக்காமல் இருந்தால் அதுவே வாழ்க்கை முறையாக மாறிவிடும். சராசரிகள் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவே மாட்டார்கள். அதனாலேயே அவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்கின்றனர்.

மேலும் தீவிரமாக

வெற்றியாளர்கள் தைரியமாக முடிவெடுப்பது பற்றிப் பயப்பட மாட்டார்கள். ஏனெனில் வெற்றிபெறுவதற்கு இன்னும் கூடுதலாகப் பயணிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கு மற்றவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். தோல்விக்கு உள்ளாகும்போது சுற்றியுள்ளவர்களின் கேலிக்கு ஆளாவதை விடச் சராசரிகளாக இருப்பது பற்றி அவர்கள் கூடுதல் அச்சத்துடன் இருப்பார்கள். முயற்சியே செய்யாதவர்கள் மட்டுமே தோல்வியே அடையாதவர்கள்.

நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்தே ஆக வேண்டும். நீங்கள் இதற்கு முன்பு போகாத பாதையில் போகும் விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் ஆழமாகத் தோண்டுங்கள். மேலும் தீவிரமாக முனையுங்கள். கூடுதலான துணிச்சலுடன் முடிவெடுங்கள். இதுவரை அடையாத அனுபவம் கிடைக்கும்.

No comments:

Post a Comment