Monday 7 July 2014

விதைத்த செயல்களை திரும்பிப் பாருங்கள்!

விதைத்த செயல்களை
திரும்பிப் பாருங்கள்!
சிதறிய செயல்களை
சீரமைக்க முயலுங்கள்!
இடையிடையே
முட்கள் முளைத்திருந்தால்
முதலில் அதை நீக்குங்கள்!
உங்களுடைய செயல்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவை. செயல்கள் தனித்தன்மை உடையதாயின் வெற்றியின் விளைச்சல் விரைவில் கிடைக்கின்றது. அதனால், உங்களுக்கு மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் மன நிறைவும் மகிழ்ச்சியும் தொடர்ந்து செயல்படுவதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் அமைந்து மென்மேலும் உங்களை உற்சாகப்படுத்துகின்றது.
மேலும், செய்கின்ற செயல்களில் ஏற்படுகின்ற சிறுசிறு குறைகளும் உள்களது வெற்றிக்கு தடை கல்லாக அமையக்கூடும். ஆகவே, அத்தகைய தடைகளை படிகளாக மாற்றுவதற்கு உங்களுடைய செயல்களை நீங்களே திரும்பிப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதாவது உங்களுடைய செயல்களை மற்றவர்கள் ஆய்வு செய்து குறை கூறுவதை நீங்கள் தவிர்க்க விரும்பினால், உங்களால் செய்து முடிக்கப்பட்ட செயல்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள். இதைத்தான் சுய ஆய்வு என்கிறார்கள்.
ஆய்வின் அவசியம்
எந்த செயலையும் விருப்பு வெறுப்பற்ற சம மனநிலையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். ஒருவரின் உடலை மருத்துவர் ஆய்வு செய்து அவருக்குள்ள நிறைகளையும் குறைகளையும் சொல்கின்றார். மேலும் நோயாளிக்கு உள்ள குறைகளைப் போக்கிக் கொள்ள தேவையான மருந்துகளையும் உடற்பயிற்சி முறைகளையும் மருத்துவர் சிபாரிசு செய்கின்றார்.
அதுபோலவே, மண்ணியியல் நிபுணரும் வயலில் உள்ள மண்ணை எடுத்து விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து, அதிலே உள்ள சத்துக்களைப்பற்றியும், அந்த மண்ணில் என்னென்ன பயிர்களை வளர்க்கலாம், மேலும் நாம் வளர்க்கும் பயிருக்கு தேவையான சத்துக்கள் இருக்கின்றதா? அவ்வாறு தேவையான சத்துக்கள் இல்லை எனில் அவற்றை எவ்வாறு உரமாக கொடுப்பது என்றும் சிபாரிசு செய்கின்றார்.
ஆகவே, ஒன்றை ஆய்வு செய்வதன் நோக்கம் அதிலுள்ள குறை நிறைகளை அறிந்து அதற்கேற்ப நமது செயல்களை மாற்றி, ஏற்புடையவாறு அமைத்துக் கொள்வதாகும். ஆய்வு செய்து குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்வதற்கு அல்ல. அந்தக் குறைகளை நிறைகளாக மாற்றுவதற்கே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நிறைகளை முதலீடு செய்யுங்கள்
உங்களுக்கு உள்ள நிறைகளையும் (Strength) திறமைகளையும் (Skills) செயல்களில் முதலீடு செய்யுங்கள். அப்பொழுதுதான். அவை வெற்றியாக உருவெடுக்கும். அவ்வாறு இல்லாமல் எனக்கு அந்தத் திறமை இருக்கின்றது. இந்தத் திறமை இருக்கின்றது எனக்கூறி கொண்டு இருப்பதால் எந்தப்பயனும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு விவசாயிடம் விதை நெல் இருக்கின்றது, அதை விதைத்து பயிர் செய்வதற்கு ஏற்ற நிலமும் சூழலும் இருக்கின்றது. ஆனால் அவர் அந்த விதை நெல்லை, விதைத்து பயிர் செய்யாமல், எதிர்காலத்தில் மழை வராவிட்டால் என்ன செய்வது? கிணற்றில் உள்ள நீர் வற்றிவிட்டால் என்ன செய்வது? பூச்சிகள் பயிரைத் தாக்கினால் என்ன செய்வது? எதிர்காலத்தில் அறுவடை செய்த மகசூலுக்கு நல்ல விலை கிடைக்கா விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு வெறுமனே இருந்தால் வெற்றி கிடைக்குமா? அல்லது காலம்தான் காத்திருக்குமா? கொஞ்சம் எண்ணிப் பார்ங்கள்.
படுத்துக் கிடப்பவனுக்கு
பகல்கூட இரவுதான்!
எழுந்து நடப்பவனுக்கு
திரும்பும் திசையெல்லாம் கிழக்கு தான்!
நம்புங்கள்! உங்களால் சாதிக்க முடியும். அத்தோடு உங்களுக்கு உள்ள திறமைகளை தொடர்ந்து பயன்படுத்தினால்தான் அவை மென்மேலும் வளரும்.
அனுபவ முத்திரைகள்
வெற்றியடையும் வரை உங்களுடைய பணிகளை தொடர்ந்து இடைவிடாமல் செய்து கொண்டே இருங்கள். ஒவ்வொரு முயற்சியின் போதும் நீங்கள் கற்றுக் கொள்ளும் புதிய பாடங்களின் அடிப்படையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கைப் பாதையெங்கும் மலர்களின் வரவேற்பை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் முட்களில் முகங்களும் உங்கள் மீது மோதக்கூடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் தன்னிலை இழக்காமல் நிதானமாகச் சிந்தித்துத் தெளிவுடன் செயல்படுங்கள். அப்பொழுதுதான் தொடர்ந்து உங்களால் வெற்றியடைய முடியும்.
மனதில் உறுதி
எதையும் மன உறுதியோடு எதிர் கொள்ளுங்கள். எதை இழந்தாலும் மன உறுதியை மட்டும் இழந்துவிடாதீர்கள். மனவலிமையே வெற்றிக்கு அடிப்படை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தோல்வி நேர்ந்து விட்டாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டாலோ, கவலையில் மூழ்கி விடாதீர்கள். சிலர் இதுபோன்ற சூழ்நிலைகளில் தங்களுடைய கற்பனைக்கு எட்டிய வரையில், ” இப்படி நேர்ந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்” ” அப்படி நேர்த்திருந்தால் என்ன செய்வது” என எல்லை இல்லாமல் கவலைப் படத் தொடங்கி விடுவார்கள்.
உதாரணமாக ஒரு விபத்து ஏற்பட்டு. அதில் இடது காலில் லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது என்றால், விபத்தில் இருகால்களும் துண்டாகி இருந்தால் என்னவாகியிருக்கும். தலை பிளந்திருந்தால் என்னவாகியிருக்கும். தலை பிளந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று விபரீதமாக சிந்திக்கவும், அதைப் பற்றி பெரும் கவலை அடையவும் தொடங்கி விடுவார்கள். இது போன்று சிந்திப்பதால் மனம் மேலும் பலவீனம் அடையுமே தவிர உறுதி அடையாதது.
புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் ஒவ்வொரு செயலையும், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்கும் போது, புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறி விடாதீர்கள். புதிய பாடங்களே வாழ்விற்கு வளர்ச்சியைக் கொடுக்கும் மூல மந்திரங்கள்.
கற்ற பாடங்களை வாழ்க்கையில் முழுமையாகப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறை புதிய கருத்துக்களை பயன்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளைக் கண்காணித்து. அதற்குத் தகுந்தாற்போல செயலாக்கத்தை மாற்றி அமைத்துக்கொண்டு முன்னேறுங்கள். ஏனென்றால் முன்னேற்றமே வாழ்வின் மூச்சுறுக்காற்று.

No comments:

Post a Comment