Friday, 24 January 2014

"பொறியாளர்களின் பொறியாளர்' ------ இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை

டாக்டர் எம்.விஸ்வேஸ்வரய்யா, மைசூர் மாகாணத்தில் சிக்கவால்புரி எனும் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் 1861-இல் பிறந்தார். தந்தை சீனிவாச சாஸ்திரி. பரம ஏழை. சாப்பாட்டுக்கு வழி செய்வதே கஷ்டமாக இருந்தது. அவ்வளவு கஷ்டத்திலும் விஸ்வேஸ்வரய்யா நன்றாகப் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேறிய அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியல் பட்டம் பெற்றார்.
 பூனாவில் ஒரு அறிவியல் கல்லூரியை ஆங்கிலேயர் நடத்தி வந்தனர். அங்கே படித்து பொறியியல் கல்வியில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் பெற்றால், அரசின் பொதுப்பணித் துறையில் உடனடி வேலைவாய்ப்பு என்னும் ஒரு விதி இருந்தது. விஸ்வேஸ்வரய்யா ஒவ்வொரு ஆண்டும் முதலாவதாக வந்து நேரடியாக பொதுப்பணித்துறையின் இணைப் பணியாளர் பதவிக்குத் தனது 23-வது வயதில் மும்பையில் பணியிலமர்த்தப்பட்டார்.
 எத்தகைய எண்ணத்திற்கும் உடனடியாக வடிவம் கொடுத்து, அதைக் கட்டடமாகக் கொண்டு வந்து நிறுத்துவதில் அவர் திறமையுள்ளவராக இருந்ததை அதிகாரிகள் அறிந்து கொண்டார்கள்.
 காண்டேஷ் மாகாணத்தில்தான் அவரது திறமைக்கு முதல் சவால் இருந்தது. அங்கே துலியா காட்டாறு அடிக்கடி தனது கொடிய ஆற்றுவெள்ளம் மூலம் சொல்லொண்ணாத் துயரங்களை மக்களுக்குத் தந்தது. ஆங்கிலேயே அதிகாரிகளால் மதயானை என்றழைக்கப்பட்ட அந்த ஆற்றின் உபரி நீரைக் கொண்டு காண்டேஷ் மாகாணம் (3 மாவட்டங்கள்) முழுவதும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்த்தார் விஸ்வேஸ்வரய்யா.
 இவரைப் "பொறியாளர்களின் பொறியாளர்' என்றும் "இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை' என்றும் அழைத்தனர்.
 காண்டேஷ், பூனா, பெங்களூர், மைசூர், பரோடா என்று 42 நகரங்களில் இன்றும் குடிநீர்ப் பஞ்சம் கிடையாது. அதற்குக் காரணம் ஒரே ஒரு மனிதர். அவர்தான் விஸ்வேஸ்ரய்யா.
 சிந்து நதியிலிருந்து நீரை அருகிலிருந்து ஒரு மலையிலிருந்த பெரிய குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குழாய்கள் மூலம் அப்பகுதியின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்த்து வைத்தவரும் இவரே.
 தமது 30-வது வயதில் பாராட்டு மழையில் நனைந்து, அகமகிழ்ந்தார்.
 இவரால் நிறுவப்பட்ட, கிருஷ்ணராஜசாகர் அணை இந்தியாவின் முதல் அணை மட்டுமல்ல முதல் நீர் மின்நிலையமும் கூட. பல ஊர்களுக்கு இன்றும் ஒளியைத் தருகிறது.
 அந்த அணையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அன்றைய பிரதமர் நேரு, "தான் அடுத்த ஜென்மத்தில் விஸ்வேஸ்வரய்யாவாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று கூறிப் புகழாரம் சூட்டினார்.
 1962-ஆம் ஆண்டு விஸ்வேஸ்வரய்யா காலமானார். அவரது பிறந்த நாளை "பொறியியலாளர் தினமாக' நம் நாடு அனுசரித்து வருகிறது.

No comments:

Post a Comment