Friday, 24 January 2014

பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு பார்வை

பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு பார்வை
Posted Date : 18:12 (12/12/2013)Last updated : 18:12 (12/12/2013)
லகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் மக்களாட்சியின் மாண்புகளை உறுதி செய்திட சுதந்திரமாகவும், பாரபட்சம் ஏதுமின்றியும், அமைதியாகவும், சட்ட முறைப்படி தேர்தல் நடத்த வேண்டியது மிகவும் இன்றியமை யாதது.
வாக்காளர் குறித்த விவரங்களை சேகரித்து வாக்காளர் அட்டை வழங்குவது முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பது வரையிலான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
இந்திய அரசமைப்பின் பகுதி XVல் தேர்தல் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கால மாறுதல்களுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றி முறையான, சட்டப்படியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தனிச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குத் தனித் தொகுதிகள் உள்ளதுபோல, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்த வர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் ஆகியோருக்கும் தனித் தொகுதிகள் இருந்தன.
1952-ம் ஆண்டு வரை கல்வித் தகுதி பெற்றோர் மற்றும் சொத்து வரி கட்டுவோர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்.
(தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 )
முதல் பொதுத் தேர்தல் (1951 - 1952)
இந்தியா குடியரசு ஆன பின், முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் மாதத்திலிருந்து 1952 மார்ச் வரை நடைபெற்றது.
'வயது வந்தோருக்கு வாக்குரிமை’ என்ற அடிப்படையில் 21 வயதான இந்தியக் குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றனர்.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 173,213,635. இந்தியா முழுவதும் 3,772 தொகுதிகளுக்கான 4000இடங்களுக்கு 59 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17,000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்த நாடாளுமன்ற மக்களவைக்கான 489 இடங்களில், காங்கிரஸ் கட்சி 364 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது.
உலகிலேயே 173 மில்லியன் வாக்காளர்களைக்கொண்ட தேர்தலை வெற்றிகரமாக நடத்திய பெருமை இந்தியாவுக்குக் கிடைத்தது.
இரண்டாவது பொதுத் தேர்தல் (1957)
403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  காங்கிரஸுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது
இரண்டாவது பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 494 இடத்தில் காங்கிரஸ் கட்சி 371 இடத்தைப் பிடித்து ஆட்சி அமைத்தது.
மூன்றாவது பொதுத்தேர்தல் (1962)
இரட்டை உறுப்பினர் தொகுதிகள் முறை ஒழிக்கப்பட்டு ஒரு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் மட்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. 492 தொகுதிகளில் இருந்து 492 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
492 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 361 தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
நான்காவது பொதுத்தேர்தல் (1967)
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 520 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இதில் இரண்டு உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்ட ஆங்கிலோ-இந்தியர்கள்.
பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ம் ஆண்டு மரணடமடைந்ததை தொடர்ந்து, காமராஜர், நிஜலிங்கப்பா தலைமையிலான 'சிண்டிகேட்' குழு, லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கியது. பதவியேற்ற இரு ஆண்டுகளுக்குள் சாஸ்திரி இறந்துவிட நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
நான்காவது பொதுத்தேர்தல் இந்திராகாந்திக்கும், சிண்டிகேட்டுக்கும் இடையேயான போட்டியாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சி மற்ற பொதுத்தேர்தலில் பெற்ற இடத்தை விட  மிக குறைந்த, (520-க்கு 283) இடத்தை மட்டும் பிடித்து ஆட்சியில் அமர முடிந்தது. இந்திரா காந்தி இரண்டாம் முறையாக பிரதமரானார்.
ஐந்தாவது பொதுத் தேர்தல் (1971)
1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும் (இந்திரா காங்கிரஸ்), காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் 'நிறுவன காங்கிரஸ்' அல்லது ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு கட்சியும் உருவாகின.
மக்களவையில் பெரும்பான்மையை இழந்த இந்திரா, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவுடன் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தார்.
பதவிக்காலம் முடிய ஓர் ஆண்டு இரண்டு மாதம் இருந்த நிலையில் இந்திராகாந்தி ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். 'வறுமையை ஒழி’ என்ற புதிய கோஷத்துடன் இந்திரா காந்தி  பிரசாரம் செய்து 352 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
ஆறாவது பொதுத்தேர்தல் (1977)
1971 தேர்தலில் இந்திரா காந்தி தனது அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கு முறைகேடாக பயன்படுத்தினார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 1975 ல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்தது.
நெருக்கடிநிலை காரணமாக 1976-ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் ஓர் ஆண்டுத் தள்ளிப் போனது.
நெருக்கடிகால கட்டத்தில் 42-வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளாக்கப்பட்டது. 1978-ம் ஆண்டு 43-வது அரசியல் திருத்த மசோதா மூலம் 6 ஆண்டு மீண்டும் 5 ஆண்டு காலமாக்கப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்திராவை எதிர்க்க நிறுவன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின.
இந்திரா அரசு மீது மக்கள் கொண்டிருந்த  அதிருப்தியால் ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது.  இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது.
விடுதலை அடைந்ததிலிருந்து ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி (ஜனதா கட்சி) 296இடத்தை கைப்பற்றி ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
ஏழாவது பொதுத்தேர்தல் (1980)
ஆறாவது பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜனதா கட்சி அரசு கூட்டணி கட்சிகளின் கருத்து வேறுபாடுகளால் மூன்றாண்டுகள் கூட ஆட்சியில் இருக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகினார்.
வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இந்திரா காந்தி தந்த வாக்குறுதியை நம்பி, சரண் சிங் பிரதமரானார். ஆனால் இந்திரா ஆதரவளிக்க மறுத்து விட்டதால், நாடாளுமன்றத்தை சந்திக்காமலேயே சரண் சிங் அரசு கவிழ்ந்தது.
1980 ம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது பொதுத்தேர்தலில் 'வேலை செய்யக்கூடிய அரசிற்கு வோட்டளியுங்கள்' (Vote for a government that works) என்ற புதிய பிரசார கோஷத்தின் மூலம் ஜனதா கட்சி ஆட்சியில் நிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டி, வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் 1980 தேர்தலில் காங்கிரஸ் எளிதில் வென்றது.
இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு (மொத்தம் உள்ள 542 இடத்தில் 353 இடம்) பெரும்பான்மை இடத்தைப் பெற்று ஆட்சியை பிடித்தது.
எட்டாவது பொதுத்தேர்தல்  (1984)
பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் இத்தேர்தல் 514 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து 1985-ம் ஆண்டு நடைபெற்றது.
1984 அக்டோபரில் இந்திரா காந்தி மறைவிற்குப் பின் அவரது இளைய மகன் ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். பிரதமரான சில நாட்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார்.
இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலை மற்றும் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில் 401 இடங்களை கைப்பற்றி ராஜீவ் காந்தி பிரதமரானார்.
காங்கிரஸுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வந்தது. 
ஒன்பதாவது பொதுத்தேர்தல்  (1989)
1989-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 61-வது அரசியல் சட்ட திருத்தத்தில் வாக்களிப்பதற்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது.
பஞ்சாப் பிரிவினைப் போராட்டம், அயோத்தி பிரச்னை, போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளால் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்திருந்தது.
போபர்ஸ் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய வி. பி. சிங் புதிதாக 'ஜன மோர்ச்சா’ என்ற கட்சியை உருவாக்கினார்.
ஜன மோர்ச்சா கட்சி, காங்கிரஸுக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், திமுக, அசாம் கன பரிசத் ஆகிய கட்சிகளை ஓரணியில் திரட்டி தேசிய முன்னணி என்றொரு கூட்டணியை உருவாக்கியது.
523 இடத்திற்கு மட்டுமே நடந்த தேர்தலில் காங்கிரஸ் 193 இடத்தையும், ஜனதாதள் 141 இடத்தையும் பிடித்தது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இந்தியாவில் முதன் முதலில் தொங்கும் பாராளுமன்றம்  அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 141 இடத்தைப் பெற்ற வி.பி.சிங் தலைமையிலான ஜனதாதள் பாரதிய ஜனதாவின் ஆதரவுடன் சிறுபான்மை அரசை அமைத்தது.
பத்தாவது பொதுத்தேர்தல்  (1991)
தேசிய முன்னணி அரசு, ஒற்றுமையின்மையால் இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வி. பி. சிங் தோற்று சந்திரசேகர் பிரதமரானார்.
சந்திரசேகர் ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டதால், சந்திரசேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.
10-வது பொதுத்தேர்தல் மே 20 மற்றும் ஜூன் 15-ல் 516 இடத்திற்கு மட்டும் தேர்தல் நடந்தது. 5 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகியவை கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
ராஜீவ் காந்தி படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரஸ் நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் 224 இடத்தைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
பதினொன்றாவது பொதுத் தேர்தல்  (1996)
தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க  முடியாததால் பதின்மூன்று நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர் மாநிலக் கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முன்னணியின் தேவகவுடா, காங்கிரஸின் ஆதரவுடன் பிரதமரானார். தேவகவுடாவுக்குப் பின் சிறிது காலம் ஐ.கே.குஜ்ரால் பிரதமராகத் தொடர்ந்தார்.
பன்னிரெண்டாவது பொதுத்தேர்தல்  (1998)
காங்கிரஸ் கட்சி ஐக்கிய முன்னணிக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதால் 1988-ல் பன்னிரெண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியதாயிற்று.
1996-ல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவளிக்க முன்வராததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சி, இரு ஆண்டு களில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. அதிமுக, பாமக, மதிமுக, சிவ சேனா, லோக் சக்தி, ஹரியானா முன்னேற்றக் கட்சி, ஜனதா கட்சி, என். டி. ஆர். தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 254 இடங்களை வென்று அதன் கூட்டணித் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், சுயேட்சை உறுப்பினர்கள் துணையுடன், 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ஆனார்.
பதிமூன்றாவது பொதுத் தேர்தல் (1999)
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இரு ஆண்டுகளே நீடித்த நிலையில், அதிமுக கூட்டணி யிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியா சத்தில் வாஜ்பாய் அரசு தோற்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. வாஜ்பாய் இடைக்காலப் பிரதமராக இருந்தபோது கார்கில் போர் வெற்றியினாலும், வலுவான கூட்டணி அமைந்திருந்ததாலும் செப்டம்பர் 1999-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 இடங்களைப் பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார்.
பதினான்காவது பொதுத் தேர்தல் (2004)
இந்திய வரலாற்றில் ஐந்தாண்டுகள் நீடித்த முதல் காங்கிரசு அல்லாத அரசு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரசாரத்தை பாஜக மேற்கொண்டது.
காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பிறகு இன்னும் சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி'யாக உருவானது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியாவில் பிறக்காதவர் என்பதால்  அவரை பிரதமராக அனுமதிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் பாஜக கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, சோனியா காந்தி தனக்கு பதிலாக  மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் (2009)
இந்தியக் குடியரசின் பதினைந்தாவது மக்களவையை தேர்தல் 5 கட்டங்களாக 2009-ல் நடைபெற்றது. இது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட தொகுதிகளை கொண்டு நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களைக்கொண்டு பதினைந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக பிரதம ரானார்.
பதினாறாவது பொதுத்தேர்தல் (2014)
இரண்டு முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள நிலையில், 2014 தேர்தலில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
பல்வேறு குழப்பங்களுக்கிடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார் 
தேர்தல் சீர்திருத்தங்கள்
தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 324-ன் கீழ் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நலத்திட்ட அறிவிப்புகள்
1967-ஆம் ஆண்டு வரை தேர்தல் குறித்த புகார்கள் அதிகமாக வரவில்லை. 1971-ஆம் ஆண்டில் புகார்கள் எழுந்ததால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின்படி, தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் புதிய திட்டங்கள் அறிவிப்பது, அரசாங்கச் சலுகைகள் அறிவிப்பது போன்றவற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
தேர்தல் செலவு
தேர்தல் நன்னடத்தை விதிமுறையின் 77-வது பிரிவு உட்பிரிவு (1)இல் சேர்க்கப்பட்ட விளக்கம் 1,  வேட்பாளரின் நண்பர்கள், கட்சிக் காரர்கள் தேர்தலுக்காகச் செலவிடும் தொகை, வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படாது என்ற விதிமுறை தேர்தல்  சீர்கேடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்து விட்டது.
வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஆகியவற்றால் கள்ளஓட்டு பிரச்னை குறைந்துள்ளது.
வேட்பாளரின் குற்றப் பின்னனி
அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகள் இடையே நிலவும் கூட்டணி குறித்து ஆய்வுசெய்ய வோரா கமிட்டி அமைக்கப்பட்டது.
1997-ல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் 40 மத்திய அமைச்சர்களும், 700 மாநில அமைச்சர்களும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று தெரிவித்தது.
குற்றப் பின்னணி உடையவர்களின் விவரங்களை வெளியிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,  வேட்புமனுவில் தன் மீதான குற்ற வழக்குகள், தண்டனை விவரங்கள், வேட்பாளரது மனைவி மற்றும் சார்ந்திருப்போரின் சொத்துக் கணக்கு, வங்கி இருப்பு, பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கு அல்லது அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்தொகை, வேட்பாளரின் கல்வித் தகுதி ஆகியவற்றை மனுவில் தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு, சட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளின் உரிமையை நீதிமன்றம் கைப்பற்றிக் கொள்வதற்கு வழிவகை செய்வதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன.
மேற்படி தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் வேட்பாளர் குறித்த விவரங்களை அறிய வாக்காளருக்கு உள்ள உரிமையை  நிலைநாட்டும் வகையில் புதிதாக சட்டம் இயற்றப்படும் வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று 2003 மார்ச் 13 ல் இறுதித் தீர்ப்பு வந்தது.
தேர்தல் சீர்திருத்த கமிட்டிகள்
தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர பல்வேறு தேர்தல் சீர்திருத்தக் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவை பரிந்துரைகளையும், யோசனைகளையும் தெரிவித்துள்ளன.
1974-ல் அமைக்கப்பட்ட வி.எம். தார்க்குன்டே கமிட்டி 1975 ல் தனது பரிந்துரையைச் செய்தது.
தினேஷ்கோஸ்வாமி கமிட்டி
1990-ம் ஆண்டு தினேஷ் கோஸ்வாமி கமிட்டி அமைக்கப்பட்டது. இது 1998-ல் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விரிவான பரிந்துரைகளைச் செய்தது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தவறுகள் செய்யும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை விதித்தல், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளருக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதற்கு தடை விதித்தல் போன்றவற்றை  தினேஷ் கோஸ்வாமி கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. அதன்படி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 1996-இல் திருத்தமும் கொண்டு வரப்பட்டது.
உறுப்பினர்கள் பதவி இழப்பதில் சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாத நிலை உள்ளது. சுயேட்சை அதிகாரம் கொண்ட சட்டசபைச் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட முன்வராவிட்டாலும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் தீர்மானமாக முடிவு எடுக்கம் விதமாக சட்டத்திருத்தங்கள் தேவை என்று தினேஷ் கோஸ்வாமி கமிட்டி அறிக்கை தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வழியில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்திரஜித் குப்தா கமிட்டி
கம்யூனிஸ்ட் தலைவர் இந்திரஜித் குப்தா தலைமையிலான குழு , அரசாங்கமே தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை ஏற்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.
ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசாங்கமே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.
அரசே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருடைய செலவை ஏற்றுக்கொண்டு அவருடைய பிரசாரக் கருவிகள், சுவரொட்டிகள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு ஆகும் செலவுகளை மனதில் கொண்டு, அரசு பொறுப்பில் அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்பது இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரை
இதன் மூலம்  ஊழல் மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் தொகையை குறைக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட செலவு அளவை நிர்ணயம் செய்து அதைத் தாண்டி செலவு செய்யும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழியிருந்தால் மட்டுமே தேர்தல் செலவில் ஒரு பகுதியை அரசு ஏற்பது அர்த்தமுடையதாக இருக்கும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஒன்று முதல் 77 வரையில் உள்ள தேர்தல் செலவு குறித்த சட்டத்தில் பல குறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்பாளர் மற்றும் ஏஜென்ட் தவிர்த்து மற்றவர்கள் செய்யும் தேர்தல் செலவை செலவுக் கணக்கில் கொண்டுவர வழியில்லை. இதனால் இதற்கான பிரிவுகளை நீக்குவதோடு செலவு மீறல்களைத் தடுக்கும் துல்லியமான நடைமுறையை உருவாக்கினால்தான் தேர்தல் செலவில் ஒரு பகுதியை அரசு ஏற்க முடியும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. சட்டக் கமிஷனும் தேர்தல் செலவு கணக்குக் குறித்து இதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவை அரசு ஏற்பது அரசாங்க கருவூலத்திற்கும் வரி செலுத்துவோருக்கும்தான் கூடுதல் சுமை எனக்கூறி இக்கருத்தை எதிர்ப்போரும் உண்டு.
தேசிய தேர்தல் நிதி
தேசிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தல் நிதி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அரசு சார்ந்த தொலைக்காட்சி போன்றவற்றில் கட்சிகளுக்கு இலவச மாக பிரசார நேரம் ஒதுக்கித் தருவதே சிறந்த முறையிலான அரசின் தலையீடாக இருக்க முடியும்.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
1985-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 52-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் படி அரசமைப்புச் சட்டத்தில் கட்சித்தாவல் தடை குறித்த பத்தாவது அட்டவணை புதிதாக சேர்க்கப்பட்டது.
கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் சேரும் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழக்க நேரிடும். ஆனால்,  மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சித் தாவினால் அதை ஏற்க வேண்டும் என்ற விதிவிலக்கு உள்ளது. இது தனியாக அல்லாமல் கூட்டமாக கட்சி தாவல் நடத்த ஊக்குவிக்கிறது என்பது வல்லுநர்களின் கருத்து.
சட்ட கமிஷன் பரிந்துரை
சட்ட கமிஷன் தனது பரிந்துரையில் தடை செய்ய வேண்டியவை என தெரிவித்துள்ள பட்டியல்:
1. சுவர் எழுத்துகள்
2. உருவ பொம்மைகள், பேனர்.
3. கொடிகள் ஏற்றுவது (கட்சி அலுவலகம் மற்றும் குறிப்பிட்ட இடங்கள் மட்டும்)
4. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வாகனங்கள் பயன்படுத்துவது.
5. அறிவிப்புச் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது.
6. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பொதுக் கூட்டங்கள் நடத்துவது.
7. சுவரொட்டிகளைக் குறிப்பிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஒட்டுவது.
இன்னும் வரவேண்டியவை
பிரமாண பத்திரத்தில்தவறான தகவல் தரும் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் பதவி பறிப்பது.
  50% குறைவான வாக்குகள் பெறுவோரும் வெற்றி பெறும் தற்போதைய நடைமுறையை மாற்றி 50% வாக்குகளுக்கும் மேல் பெறுபவரை வெற்றி பெற்றவராக அறிவித்தல்.
 வேட்பாளரை நிறுத்தாமல் கட்சிகளுக்கு வாக்கு என்பதன் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
 தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மறைமுகமாக அரசு மற்றும் வேட்பாளர் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு தடை விதித்தல்.
இவையெல்லாம் எப்ப வரும்? எப்படி வரும்னு தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வரும் என்று காத்திருக்கிறார்கள் இந்திய வாக்காளர்கள்.

தேர்தல் ஆணையம்
இந்திய அரசமைப்பின் உறுப்பு 321... குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநில சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்துதல்,மேற்பார்வையிடல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது.
உறுப்பு 324 (2), தேர்தல் ஆணையரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
ஒரு தலைமை தேர்தல் ஆணையரையும் பிற தேர்தல் ஆணையர்களையும் பாராளுமன்றம் இயற்றுகின்ற சட்டங்களுக்குட்பட்டு குடியரசுத்தலைவர் நியமனம் செய்யலாம்.
தலைமை தேர்தல் ஆணையரே தேர்தல் ஆணையத்தின் தலைவர்.
1989 வரை தேர்தல் ஆணையம் குறித்த கருத்து வேறுபாடுகள் எழவில்லை. 
1989 ல் இரண்டு தேர்தல் ஆணையர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டு 1990 ல் நீக்கப்பட்டனர்.
1993 அக்டோபரில் இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்து அவசரச் சட்டம் ஒன்றை குடியரசுத்தலைவர் நிறைவேற்றினார்.
எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவுசெய்ய 17A விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து தரலாம் என 1961-ம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு 49 O-ல் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று 17A விண்ணப்பத்தில் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் விருப்பம் இல்லாதது குறித்து தனியாக பட்டன் அமைக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று அப்போது  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 நோட்டா
2013 ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலில் வாக்காளர்களுக்கு 'மேற்கண்ட யாருக்கும் வாக்கு இல்லை (நோட்டா)’ என்ற பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது வாக்குச் சீட்டில் அது தொடர்பான வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களுக்கு பிறகு கடைசியாக, வாக்குச்சீட்டு என்றால் 'யாருக்கும் வாக்கு இல்லை’ ( NOTA – None Of The Above) என்ற வாசகமும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்றால், 'NOTA’ என்று குறிப்பிடப்பட்ட பட்டனும் அமைக்கப்பட வேண்டும். வேட்பாளர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்ட அதே அளவு மற்றும் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'நோட்டா’ வசதி நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற டெல்லி, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. தமிழகத்தில் ஏற்காடு இடைத்தேர்தலிலும் இது அமல்படுத்தப்பட்டது.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு; அதை ரகசியமாகத் தெரிவிக்கும் வசதியும் மக்களுடைய உரிமை என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
நோட்டா வசதி மூலம் மக்கள், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிராகரிக்கத் தொடங்கினால்தான், அரசியல் கட்சிகள் மக்கள் அபிமானம் பெற்ற நல்லவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முன்வரும். இதனால், பொது வாழ்வில் தூய்மையானவர்களின் அரசியல் செல்வாக்கு உயரும். ஆகையால் 'நோட்டா மக்களின் தோட்டா’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
'நோட்டா’வைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பல காத்திருக்கின்றன. அரசியல் கட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வது, தேர்தல் செலவைச் சமமாக்குவது, உட்கட்சித் தேர்தல்களைத் தேர்தல் ஆணையமே நடத்துவது, பிரதிநிதிகளைப் பதவியிலிருந்து திரும்பப் பெறும் மக்கள் அதிகாரம், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவது, கொள்கை விஷயங்களில் மக்களிடம் நேரடியான கருத்து வாக்கெடுப்புச் சட்டம் என்று நீண்ட பட்டியல் உள்ளது.
 தேர்தல் சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட குழுக்கள்
வி.எம். தார்க்குன்டே கமிட்டி (1974)
தினேஷ் கோஸ்வாமி கமிட்டி  (1990)
வோராவின் கமிட்டி (1993)
இந்திரஜித் குப்தா கமிட்டி (1998)
சட்டக் கமிஷன் அறிக்கை (1999)
தேசிய அரசமைப்பு மதிப்பாய்வு கமிஷன் (2001)
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தங்கள் (2004)
இரண்டாவது நிர்வாக சீர்திருத்த கமிஷன் (2008)
வாக்காளர் மறுசீரமைப்பு மைய குழு (2010)

No comments:

Post a Comment