Friday, 20 November 2015

மியான்மர்

 கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் உண்மையிலேயே சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல். நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பதும், ஒரு சிறிய அசம்பாவிதம் அல்லது வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. 3 கோடி வாக்காளர்களில் 80% பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள். கிராமப்புறங்களில் இந்த அளவுக்குப் பரவலாக மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் இதுவே முதல்முறை. இதற்காக நாட்டின் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எடுத்துரைத்த அமைப்புகளும் பாராட்டப்பட வேண்டும். 664 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம்பெற 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆங் சான் சூச்சியின் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ (என்.எல்.டி.) கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. மியான்மரின் வெவ்வேறு நிலைகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. மியான்மரின் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் அரசு அமையப் போகிறது. எனினும், அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது ராணுவத்தின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆங்சான் சூச்சி அதிபர் பதவி ஏற்க முடியாத சூழலை அந்நாட்டின் அரசியல் சட்டம் மூலம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரை ஆங் சான் மணந்தார். அவருடைய 2 மகன்களும் இப்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகப் பெற்றவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆங் சானை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்தது ராணுவ அரசு. ஆனால் நாட்டுக்குள்ளும் சர்வதேச அரங்குகளிலும் அவருக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய அரசுக்கு ஆதரவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தின் 664 உறுப்பினர்களில் 25% பேர் ராணுவத்தின் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்க ளுடைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது ஆங்சான் சூச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கும். மியான்மரை ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது எளிதாக இருக்காது. ஆசியாவின் வறிய நாடுகளில் மியான்மரும் ஒன்று. அரசின் எந்தத் திட்டமும் நாட்டு மக்களில் 3% பேரை மட்டுமே அடைகிறது. ஆயுதம் ஏந்திய வெவ்வேறு இனக் குழுக்கள் அதிகம். மேலும், பவுத்த பெரும்பான்மையினவாதக் குழுக்கள் மதச் சிறுபான்மையோரை அடக்க தொடர்ந்து முற்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மியான்மரின் ஜனநாயக இழிவுகளில் ஒன்று. மியான்மர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டியிருப்பதால் பெரிய நிறுவனங்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்த அரசால் அவை இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுவதைத் தடுக்க முடியவில்லை. உலக அளவில் காடுகள் அழிக்கப்படுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மியான்மர்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள அரசு இந்தச் சவால்களைச் சமாளித்தாக வேண்டும். இதுவரை புறக்கணித்துவந்த மியான்மர் மீது இந்திய அரசும் இனி அதிகக் கவனம் செலுத்த வேண்டும்!

No comments:

Post a Comment