Tuesday, 27 December 2016

சர்வதேச_ஆண்டுகள் !!


சர்வதேச_ஆண்டுகள் !!

* 1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.

* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம்ஆண்டு.
* 2010-2011 - அனைத்துலக இளைஞர் ஆண்டு
* 2013 - சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்டு
* 2014 - சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.
* 2015 - சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)
* 2016 - சர்வதேச பருப்பு ஆண்டு

வஉசி

வஉசி

நட்புக்கு அடையாளம் சிவாவும் சிதம்பரமும்! #கப்பலோட்டியதமிழர்

கப்பல்

பண நோட்டுகளை மாற்ற மக்கள் அலை மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தனது மகளுக்கு 200 கோடிக்கு மேல் செலவழித்து திருமணம் நடத்தும் மனிதர்கள் வசிக்கும் அதே நாட்டில்தான் அந்த மனிதரும் பிறந்தார். பெயர் வ.உ. சிதம்பரம். சுருக்கமாக வ.உ.சி.கப்பல் ஓட்டிய தமிழர் என்றழைக்கப்படுபவர். தூத்தூக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சொந்த ஊர். பாரதியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  இருவரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

வஉசி மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவர்.  மிகச்சிறந்த படிப்பாளி. வக்கீலுக்கு படித்தவர். எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர். கடந்த 1890 முதல் 1900-ம் ஆண்டுகளில் நாட்டில் சுதந்திர வேட்கைத் தீவிரமடைந்த காலக்கட்டம். வஉசி, மராட்டிய வீரர் பாலகங்கதாரத் திலகரை குருவாக ஏற்றார். சென்னையில் ஒரு முறை விவேகானந்தரின் சீடர் ராமகிருஷ்ணரை சந்தித்தார் வஉசி. அப்போது 'நாட்டு சுதந்திரத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ' என வஉசியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து 1905-ம் ஆண்டு காங்கிரசில் இணைத்துக் கொண்ட வஉசி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார். சுப்ரமணிய பாரதியும் தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல தொழில்களை வஉசி தொடங்கினாலும் சுதேசிக் கப்பல் கம்பெனிதான் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

'பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி' என்பது ஆங்கிலேயருக்கு சொந்தமானது. வஉசி தொடங்கிய கப்பல் நிறுவனத்தின் பெயர் சுதேசிக் கப்பல் கழகம். தொடக்கத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செயயப்பட வேண்டுமென்பது திட்டம். நிதி திரட்ட 40 ஆயிரம் பங்குகள் வெளியிடப்பட்டது. அதன் முகமதிப்பு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆசியாவைச் சேர்ந்த எவரும் பங்குகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்த ஜமீந்தார் பாண்டித்துரை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பணம் அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை.  பாரதி  ' இந்தியா' பத்திரிகையில் நிதி திரட்ட தலையங்கம் எழுதினார். ஆனாலும் குறைந்த அளவே நிதி  சேர்ந்திருந்தது.

முதலில் சுதேசிக் கப்பல் கம்பெனி கப்பலை வாடகைக்கு எடுத்து தூத்தூக்குடியில் இருந்து கொழும்புக்கு ஓட்டியது. ஆனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கொடுத்த நெருக்கடியில் கப்பலை வாடகைக்கு கொடுத்த நிறுவனம் குத்தகையை ரத்து செய்தது. இது வஉசிக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது. நாடு முழுவதும் சுற்றினார். பங்குகளை விற்று பணத்தை திரட்டும் பணியில் தீவிரமானார். 'ஒன்று கப்பல் வாங்குவேன் அல்லது கடலிலேயே கரைந்து விடுவேன் ' என சூளுரைத்தார். நிதி திரண்டது. தேவையான நிதி சேர்ந்ததும் முதலில் எஸ்.எஸ் காலியோ கப்பலை வாங்கினார். கப்பல் தூத்தூக்குடி வந்தடைந்ததும் பெரிய விழா எடுக்கப்பட்டது. காலியோவை தனது முதல் பிள்ளை என்பார் வஉசி. அடுத்து பிரான்சில் இருந்து லாவோ வந்தது.

இரு கப்பல்களும் பிரிட்டன் கப்பல் கம்பெனிக்கு எதிராக தூத்தூக்குடியில் இருந்து  கொழும்புவுக்கு ஓடத் தொடங்கின. போட்டி உருவானது. பிரிட்டன் கப்பல் கொழும்புக்கு ஒரு ரூபாய் கட்டணம் என்றது.சுதேசிக் கப்பல் 50 பைசாவுக்கு பயணிகளை அழைத்துச் சென்றது. ஆடிப் போனது பிரிட்டன் கப்பல் கம்பெனி. நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை நஷ்டத்தை சந்தித்தது பிரிட்டிஷ் கம்பெனி. தேசப்பற்று மிக்க மக்கள் பிரிட்டிஷ் கப்பல்களை புறக்கணித்ததும் இதற்கு ஒரு காரணம்.

தூத்துக்குடியில் மதுரா கோட்சின் கோரல் மில் இயங்கி வந்தது. இந்த மில்லில் தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து வஉசி போராடினார். சிதம்பரத்துடன் சுப்பிரமணிய சிவாவும் சேர்ந்து கொண்டார். சுப்பிரமணியம் சிவா மீதும் பிரிட்டன் அரசு பல வழக்குகளைப் போட்டிருந்தது. சிதம்பரமும் சிவாவும் ஸ்ட்ரைக்கை முன்னின்று நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் மற்ற ஆங்கிலேய நிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியது. சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கோபமும் சிதம்பரம் மீது ஆங்கில அரசுக்கு இருந்தது.

தூத்துக்குடியில் சிதம்பரமும் சிவாவும் கலகத்தை ஏற்படுத்துவதை அறிந்த ஆங்கிலேயே அரசு சிதம்பரத்தை மடக்க திட்டமிட்டது. திருநெல்வேலிக்கு சிவாவுடன் வருமாறு சிதம்பரத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஞ்ச் துரை கேட்டுக் கொண்டார். பேச்சுவார்த்தைக்கு வந்த சிதம்பரத்திடம் 'இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது போராட்டங்களில் ஈடுபடக் கூடாது' என ஆங்கிலேயே அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சிதம்பரம் மறுத்தார். உடனடியாக கைது செய்யப்பட்டார். 1908 மார்ச் 12-ம் தேதி சுப்பிரமணிய சிவாவும் சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, தூத்தூக்குடியில் பெரும் கலவரம் வெடித்தது. வழக்கு நேர்மையாக நடைபெறதாத காரணத்தினால் விசாரணையில் பங்கேற்க வஉசி மறுத்துவிட்டார். முடிவில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 20 ஆண்டுத் தண்டனையும் அடங்கியிருந்தது. முதலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் . தண்டனை விதிக்கப்பட்டபோது வஉசிக்கு 36 வயதே ஆகியிருந்தது. பின்னர் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மேல் முறையீட்டுக்கு பிறகு தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

வஉசி சிறைக்கு சென்று விட்டதால், பங்குதாரர்களால் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. கப்பல்களை விற்க முடிவு செய்தனர். விடுதலையாகி வெளியே வந்தபோது, வஉசியை வரவேற்க அவரது ஆத்ம நண்பர் சுப்பிரமணியம் சிவா இன்னும் சிலர் மட்டுமே சிறைக்கு வந்திருந்தார்கள்.  அவரது முதல் பிள்ளையான எஸ்எஸ் காலியோ யாரை எதிர்த்து கப்பல் ஓட்டினாரோ... அவர்களுக்கே விற்கப்பட்டிருந்தது!.

ராஜஸ்தானுக்கே...

மழைப்பொழிவு குறைந்த மாநிலங்களில் ராஜஸ்தானுக்கே முதலிடம். அதுபோல இந்தியாவில் பாலைவனத்தைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையும் இந்த மாநிலத்துக்கு உண்டு.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரம் அழகிய அரண்மனைகள், கோட்டைகள், பிரமாண்ட மாளிகைகள் போன்றவற்றிற்கு சொந்தமானது. இதனால் இந்தியாவின் சிறந்த சுற்றுலா மையமாக ஜோத்பூர் விளங்குகின்றது. இந்நிலையில் 2017-ம் ஆண்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக ஜோத்பூர் திகழும் என கூறப்படுகிறது.

தங்குமிடம், உணவு விடுதிகள், கவன ஈர்ப்பு, மக்களின் விருப்பம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வெளியான ஆய்வு முடிவுகள் ஜோத்பூரின் மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதிபலிக்கின்றன.

உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான 43 சுற்றுலா தலங்களில் 10-வது இடத்தையும் ஆசியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் 3-வது இடத்தையும் ஜோத்பூர் நகரம் பிடித்துள்ளது.

இதனால் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக ஜோத்பூர் திகழும் என டிரிப் அட்வைசர் நிறுவனத்தின் மேலாளர் நிகில் கஞ்ஜு தெரிவித்துள்ளார்.

வழக்கு..

 1.சங்கிரி பிரசாத் வழக்கு: 1951
அடிப்படை உரிமைகளை திருத்தம் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என தீர்ப்பு.

2.சஜன் சிங் வழக்கு: 1965 அடிப்படை உரிமைகளை எடுத்துக் கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு என தீர்ப்பு.

3. கோலக் நாத் வழக்கு : 1967 அடிப்படை உரிமைகளை திருத்தம் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று அதிரடி தீர்ப்பு.

4.கேசவ நந்த பாரதி வழக்கு:1973
அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பை( Basic structure of the Constitution) மாற்றாமல் அடிப்படை உரிமைகளில் நாடாளுமன்றம் மாற்றம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

5.மினர்வா மில் வழக்கு : 1980
அடிப்படை உரிமைகளும் ,
வழிகாட்டு விதிகளும் சமமான முக்கியத்துவம் உடையவை.

இவற்றை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்ல உச்சநீதி மன்றத்தின் நீதிப்புனராய்வு
(Judicial Review) அதிகாரத்தை சட்டத் திருத்தத்தின் மூலம் எக்காரணம் கொண்டும் பறிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பே இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

Wednesday, 9 November 2016

இரட்டைக் குழந்தை..

சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை யூனியோவலர்ட் ட்வீன்ஸ் என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்‘ என்கிறார்கள். குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு கிட்னி, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.

இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்‘ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட, இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.

அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் கேட்டால் எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தில் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.

இந்திய மாநிலங்கள் குறித்த முக்கிய தகவல்கள்...


இந்திய மாநிலங்கள் குறித்த முக்கிய தகவல்கள் :::
● இந்திய சுதந்திரத்தின் போது part-A , part -B, part- C, part-D (part -A, part -B --> states , part -C,part - D--> union territories ) என நான்கு வகை மாநிலங்கள் இருந்தன.
● மொழி,பண்பாடு,கலாச்சாரம் வாரியாக மாநிலங்களை பிரிக்க 1947 ஜூன் மாதத்தில் எஸ்.கே.தார் தலைமையில் குழு அமைககப்பட்டது. இக்கழு 1948 டிசம்பரில் மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்த பரிந்துரைத்து அறிக்கை அளித்தது.
● தார் குழுவின் அறிக்கையை ஆராய 1948 டிசம்பர் ஜெய்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு,வல்லபாய் படேல்,பட்டாபி
சீதாராமையா ஆகிய மூவர் அடங்கிய JVP குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1949 ஏப்ரல் 1 ல் தார் குழுவின் பரிந்துரையை நிராகரித்து அறிக்கை அளித்தது.
● 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரபிரதேசத்தின் மாநில கோரிக்கையை வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
● இதனால் ஆந்திரபிரதேச மாநில சட்டம் இயற்றப்பட்டு 1-10-1953 ல் கர்னூலை தலைநகரமாக கொண்டு புதிய ஆ.பிரதேச மொழிவாரி மாநிலம் ஏற்படுத்தப்பட்டது.
● 1953 டிசம்பரில் பாசல் அலி தலைமையில் கே.எம்.பனிக்கர் , எச்.எம்.குஸ்ரு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
● இக்குழு 1955 செப்டம்பரில் மாநிலங்களை மொழிவாரியாக 16 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பரிந்துரைத்து அறிக்கை அளித்தது.
● இதன்படி 1956-ல் மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 7-வது சட்டத்திருத்தம் மூலம் இந்தியாவை மொழிவாரியாக 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
● மொழிவாரி மாநிலங்கள்
1. ஆந்திர பிரதேசம்
2. அஸ்ஸாம்
3. பீகார்
4. பம்பாய்
5. ஜம்மு காஷ்மீர்
6. கேரளா
7.மத்திய பிரதேசம்
8. மெட்ராஸ்
9. மைசூர்
10. ஒரிஸா
11. பஞ்சாப்
12.ராஜஸ்தான்
13. உ.பிரதேசம்
14.மே.வங்காளம்
● யூனியன் பிரதேசங்கள்
1.அந்தமான் நிக்கோபர்
2.டெல்லி
3.ஹிமாச்சல் பிரதேசம்
4.இலட்சத்தீவு மினிகாய் அபினி தீவு
5.மணிப்பூர்
6. திரிபுரா
● 15-வது மாநிலம் குஜராத் -1960 ( பம்பாயிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 16-வது மாநிலம் நாகலாந்து- 1962
(அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 17-வது மாநிலம் ஹரியானா -1966( ஷ கமிஷன் பரிந்துரைப்படி பஞ்சாப்பிலிருந்து பிரிக்கப்பட்டது.)
● 18-வது மாநிலம் ஹிமாச்சல் பிரதேசம் - 1970
●19-வது மாநிலம் மணிப்பூர்-1970
● 20-வது மாநிலம் திரிபுரா - 1970
● 21-வது மாநிலம் மேகாலயா - 1970
● 22-வது மாநிலம் சிக்கிம் -1970
● 23-வது மாநிலம் மிசோரம் -1987
● 24- வது மாநிலம் அருணாச்சல பிரதேசம் - 1987
● 25- வது மாநிலம் கோவா-1987
● 26- வது மாநிலம் சத்தீஸ்கர் - 1.11.2000.(ம.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 27- வது மாநிலம் உத்ராஞ்சல் - 9.11.2000( உ.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 28- வது மாநிலம் ஜார்கண்ட் - 15.11.2000 ( பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டது)
● 29- வது மாநிலம் தெலுங்கானா - 2.6.2014 ( ஆ.பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
● 1961-ல் தாத்ரா நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசமானது( 10 -வது ச.திருத்தம்)
● 1962- ல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமானது( 14 -வது ச.திருத்தம்)
●1966-ல் சண்டிகர் யூனியன் பிரதேசமானது
● 1991- டெல்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. ( 69 -வது ச.திருத்தம்)
●●● மாநிலங்களின் பெயர் மாற்றம்:::
● 16.4.1967 தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் மற்றும் 1968 மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டப்படி 14.1.1969 ல் மெட்ராஸ் என்பது தமிழ்நாடு என அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மாற்றப்பட்டது.
● 1973-ல் மைசூர் என்பது கர்நாடகா என மாற்றப்பட்டது.
● 1973 இலட்சத்தீவு மினிக்காய் அபினிதீவு என்பது இலட்சத்தீவு என மாற்றப்பட்டது.
● 2006- ல் பாண்டிச்சேரி என்பது புதுச்சேரி என மாற்றப்பட்டது.
● 2006- ல் உத்ராஞ்சல் என்பது உத்ரகாண்ட் என மாற்றப்பட்டது.
● 2010-ல் ஒரிஸா என்பது ஒடியா என மாற்றப்பட்டது.
●1991 - டெல்லி --> நியூ டெல்லி
●1995- பம்பாய் --> மும்பை
● 1996 - மெட்ராஸ் --> சென்னை
● 2000- கல்கத்தா --> கொல்கத்தா
● 2000- மைசூர் --> மைசூரு
● 2000- பெங்களூர் --> பெங்களூரு

கே.ஆர். நாராயணன்

இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்... 'ஜனாதிபதி' என்பவர் மத்திய அரசின் முகமாக மட்டுமே கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி, அதுவரை பின்பற்றப்பட்டு வந்த பல மரபுகளை உடைத்தெறிந்தவர்... "ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் குடியரசுத் தலைவர்  நான்" என்று தன்னை கூறிக் கொண்டவர் மறைந்த கே.ஆர். நாராயணன். அவரது நினைவு தினம் இன்று...

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் கொச்சேரில் ராமன் நாராயணன். இவர்,  1920-ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி பிறந்தார்.

குறிச்சிதனம் என்ற சிற்றூரில், தொடக்கக் கல்வி  உழவூரில் நடுநிலைக் கல்வியையும் பயின்ற கே.ஆர். நாராயணன், உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். மிகவும் ஏழைக் கூத்தாட்டுக் குளம் மற்றும் குரவிளங்காடு ஆகிய இடங்களில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். தொடக்கக் கல்வி பயிலும் போது, குடும்பத்தின் ஏழ்மை காரணமாக வயல்வெளிகளைக் கடந்து, 10 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று படித்தார். கோட்டயத்தில் கல்லூரிக் கல்வியையும், கேரள பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார். இதழியல் படிப்பை முடித்திருந்த கே.ஆர். நாராயணன்,  பிரபல ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், எனினும் வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற தீராத ஆர்வத்துடன் அவர் இருந்தார். பத்திரிகையாளராக இருந்தபோது, 1945-ம் ஆண்டில், மகாத்மா காந்தியை பேட்டி கண்டுள்ளார். பின்னர் டாடா குழும கல்வி உதவித் தொகையைப் பெற்று, லண்டன் பொருளாதாரக் கல்விக் கழகத்தில் (London School of Econmics) அரசியல் அறிவியலில் மேல் படிப்பை  முடித்தார்.

கடின உழைப்பும், திறமையும் இருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றியை எட்ட முடியும்  என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கே.ஆர். நாராயணன். தடைகள் பல தாண்டி, உயர் கல்வியை பயின்ற கே.ஆர். நாராயணன், சமூக முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டதால், நாட்டின் முதல் குடிமகனாக உயர முடிந்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவு ஆட்சிப் பணியில் (I.F.S) சேர்ந்த கே.ஆர். நாராயணன், ஜப்பான், இங்கிலாந்து, தாய்லாந்து, துருக்கி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்தியத் தூதராக பணியாற்றி, நேருவின் பாராட்டைப் பெற்றவர். ஐ.எஃப்.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, கடந்த 1984-ம் ஆண்டு அரசியலுக்கு வந்த இவர்,  ஒட்டப்பாலம் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பரிந்துரையின்பேரில், 1992-ம் ஆண்டு இந்தியாவின் 9-வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சங்கர் தயாள் சர்மாவின் குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், 1997-ம் ஆண்டு நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.

ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் பிரதமர்களாக இருந்த அக்காலகட்டத்தில், 1997 ஜூலை 25 முதல் 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர். தலித் பிரிவில் இருந்து நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்த ஒரே தலைவர் இவரே. இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டபோது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்து பெருமைக்குரியவர். நாட்டின் சுதந்திர பொன்விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த சிறப்பும் கே.ஆர். நாராயணனுக்கு உண்டு.

கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி சாதனை புரிந்தார். அதுவரை இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்த வேறு எவரும் தேர்தலில் பொதுவாக வாக்களிப்பதில்லை. ஆனால், அந்த மரபை முதல்முறையாக மாற்றியதுடன், குடியரசுத் தலைவரும் வாக்களிக்கக் கடமைப்பட்டவர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர்.

மேலும் குடியரசுத் தலைவர் என்றால், மத்திய அரசின், 'ரப்பர் ஸ்டாம்ப்'  என்ற முத்திரையையும் உடைத்தெறிந்த பெருமை கே.ஆர். நாராயணனையேச் சேரும். மத்திய அமைச்சரவை அனுப்பி வைக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவர் அதனை பலமுறை தனது பதவிக் காலத்தில் நிரூபித்தும்  உள்ளார். உதாரணத்திற்கு, 1998-ல், மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய பீஹார் மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முடிவு செய்து, மத்திய அமைச்சரவை அனுப்பிய  பரிந்துரையை நிராகரித்து திருப்பி அனுப்பினார். காங்கிரஸ்காரராக அரசியல் வாழ்க்கையைத தொடங்கிய போதிலும், கடந்த 1992-ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம் இது" என தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்தினார்.

மத்திய அமைச்சராக பதவி வகித்தபோதும், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உயர்ந்த போதிலும், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட தன்னால் இயன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கல்வியில், கேரள மாநிலம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக முன்னேற்றம் அடைய அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக எண்ணற்றத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

குடியரசுத் தலைவராக உயர்ந்த நிலையில் இருந்தாலும், பல்வேறு மரபுகளை மாற்றி, தனது வாழ்நாள்வரை மிகவும் எளிய மனிதராகவே வாழ்ந்த கே.ஆர். நாராயணன், 2005-ம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 9), தனது 85-வது வயதில், உடல் நலக்குறைவால், டெல்லியில் காலமானார்.

அவர் மறைந்தாலும் முன்னாள் ஜனாதிபதியாக அவர் நிலைநாட்டி விட்டுச் சென்றுள்ள பல்வேறு சமூக மாற்றங்களும், மரபுகளும் இந்தியாவில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.