Friday, 24 January 2014

தமிழக மாவட்டங்கள்- 4

தேனி மாவட்டம்
 மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் இந்த அழகிய மாவட்டம், 1996-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி மதுரையில் இருந்து  பிரிக்கப்பட்டது. பின்னர் உத்தம பாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகியவை தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டன.
1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், மாவட்டமாகச் செயல்பட துவங்கியது. இது, ஏற்கெனவே மதுரை மாவட்டத்துடன் இருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறே தேனிக்கும் பொருந்தும்.
தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, சர்வதேசத் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, நிலக்கடலை, தேயிலை, புகையிலை, கொக்கோ, ஏலக்காய் (போடிநாயக்கனூர்  ஏலக்காய் நகரம்) போன்றவை முக்கியப் பயிர்கள்.
பெரியகுளம் மாம்பழ விளைச்சலுக்குப் புகழ் பெற்றது.
கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை ஆண்டு முழுவதும் பயிராகிறது.
இரண்டாம் நிலைத் துறை
பருத்தி நூற்பாலைகள், சர்க்கரை ஆலை, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை முக்கியத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள்: இம்மாவட் டத்தில் வைகை அணை, சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை அருவி, வீரபாண்டி அணைஆகியவை முக்கிய சுற்றுலா தலங்களாகும்.
வைகை அணையின் சில்வன் தோட்டம் 'குட்டி பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படுகிறது.
மேகமலையில் உள்ள 'க்ளவ்ட் லாண்ட்’ அருவி சின்னச் சுருளி அருவி என்று அழைக்கப்படுகிறது.
தமிழக - கேரள எல்லையில் சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகி கோயிலில் (ஸ்ரீ மங்களா தேவி கோயில்) சித்ரா பௌர்ணமித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் வீரபாண்டியில் நடைபெறும் கௌமாரியம்மன் திருவிழா புகழ்பெற்றது.
மேகமலையில் உள்ள காட்டுப் பகுதியில் 'இந்தியன் நியூட்ரினோ அப்சர்வேட்டரி’ எனப்படும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது.
பழங்காலத்தில் அரிகேசவ நல்லூர் என்றழைக்கப்பட்ட சின்னம னூரில் கிடைத்த செப்பேடுகள், சங்க காலத்திலேயே மகாபாரதம் தமிழ்ப்படுத்தப்பட்ட தகவலைத் தருகின்றன.
இந்தியாவிலேயே சனி பகவானுக்கு என்று அமைந்த தனிக்கோயிலான குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சுரபி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள்:  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக். நீதிக் கட்சித் தலைவர் பி.டி.ராஜன், ஓ.பன்னீர்செல்வம், நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து, எஸ். எஸ். ராஜேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், பாரதிராஜா, இயக்குநர் பாலா, இளையராஜா.

திண்டுக்கல் மாவட்டம்
இங்கு உள்ள கோட்டை, 17-18-ம் நூற்றாண்டுகளில் மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலி அரசுகளின் படைக்களமாக இருந்தது. நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள்,  ஆங்கிலேயர் போன்றோரின் ஆட்சிக்காலங்களில் ராணுவத் தளமாக மாறியது.
பாண்டிய நாட்டைச் சேர்ந்த இந்தப் பகுதி, மதுரை மாவட்டத்தில் இருந்தது. 1985-ல்  மதுரை மாவட்டத்தில் இருந்த சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, செப்டம்பர் 15-ம் தேதி 'திண்டுக்கல் அண்ணா மாவட்டம்’ என உதயமானது. 1989, மார்ச் 27-ல் 'திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம்’ என பெயர் மாறியது. 1996-ம் ஆண்டு திண்டுக்கல் 'மன்னர் திருமலை மாவட்டம்’ என்று பெயர் மாறியது. 1997, ஜூலை முதல் 'திண்டுக்கல் மாவட்டம்’ என்ற பெயரே இன்று வரையில் நிலைத்து நிற்கிறது.
முதன்மைத் துறை
மலர் உற்பத்தியினால் 'தமிழ் நாட்டின் ஹாலந்து’ என அழைக்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, வத்தலக்குண்டு தக்காளி, நிலக்கோட்டை பன்னீர் திராட்சை போன்றவை புகழ்பெற்றவை.
பருத்தி, வெங்காயம் மற்றும் நிலக்கடலையின் மொத்த சந்தை.
இரண்டாம் நிலைத் துறை
பட்டிவீரன்பட்டி ஏலக்காய்த் தொழிற்சாலை, 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், தனியார் சேமியா ஆலைகள், சாம்பிராணி தொழிற்சாலை போன்றவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
சின்னாளம்பட்டி சுங்குடி சேலை, அங்குவிலாஸ் புகையிலை, திண்டுக்கல் பூட்டு போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
சில்வர் கேஸ்கேட், நெப்டியூன், எலிவால் அருவி, தலையாறு அருவி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளதால் 'அருவி மாவட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பிரபலம்.
காந்தி கிராம பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக் கழகம் (கொடைக்கானல்) முக்கிய பல்கலைக்கழகங்கள்.
சுற்றுலாதலங்கள்: கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக் (coaker’s walk) , பில்லர்ஸ் ராக்ஸ் (Pillar Rocks) , , பிர்யங்க் பூங்கா (Bryank Park) , நட்சத்திர ஏரி (Star Shapdelit lake),  சூரிய கோள் அரங்கம் (solar observatories) , பச்சைச் சமவெளி (Green Valley View) பிரதேசம், சில்வர் கேஸ்கேடு (Silver Cascade) 160; நீர்வீழ்ச்சி, ஃபெய்ரி நீர்வீழ்ச்சி (Fairy Falls) க்ளென் நீர்வீழ்ச்சி (Glen Falls) பிரீஸ்ட் வாக் (Priests walk) பகுதி, பழனி மலை மீதுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் போன்ற இடங்கள் சுற்றுலா முக்கியத்துவம் பெறுகின்றன. கொடைக்கானல் கோடைவிழாவும், மலர்கண்காட்சியும் தமிழகத்தில் புகழ்பெற்ற விழாக்களாகும்.

திருப்பூர் மாவட்டம்
கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூர், உடுமலைப்பேட்டை, பல்லடம், அவினாசி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்த தாராபுரம், காங்கயம், பெருந்துறை ஆகிய தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு, 2008, அக்டோபர் மாதம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, வாழை போன்றவை முக்கிய உற்பத்திப் பயிர்கள்.
தேசிய அளவில் புகழ் பெற்ற காங்கயம் இனக் காளைகள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவை.
இரண்டாம் நிலைத் துறை
இந்தியாவின் பின்ன லாடைத் நகரமான திருப்பூர், ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. 
இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான 'நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்கா’ 2005ம் ஆண்டு திருப்பூரில் திறக்கப் பட்டது.
ஊத்துக்குளி- வெண்ணெய் உற்பத்திக்கும், திருமுருகன்பூண்டி- கருங்கல் சிற்பத் தொழிலுக்கும், காதர் பேட்டை- தள்ளுபடித் துணி களுக்கும் புகழ் பெற்றவை.
காற்றாலைத் தொழிலுக்கு இம்மாவட்டம் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : திருமூர்த்தி அணை, அமராவதி அணை, அமராவதி முதலைப் பண்ணை (இந்தியாவின் மிகப் பெரிய முதலை நர்சரி)
பிற்காலத்தில் ராணுவத்தில் சேருவதற்கென்றே மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் சைனிக் பள்ளி இம்மாவட்டத்திலுள்ள அமராவதியில் அமைந்துள்ளது.
குறிப்பிடத்தக்கவர்கள்:  புல்லாங்குழல் வித்வான் சஞ்சீவராவ், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் , திரைப்பாடலாசிரியரும், பகுத்தறிவுப் பாடல்களை இயற்றியவருமான உடுமலை நாராயணகவி.

கோயம்புத்தூர் மாவட்டம்
தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமான கோயம்புத்தூர், ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தொழில்மிகு நகரமான 'கோவை’யை, பண்டைய காலத்தில் கன்னடம் பேசும் கங்க மன்னர்களும், பிறகு சோழர், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் ஆட்சி செய்தனர்.
கொங்கு மண்டலத்தில் இருந்த பெரிய ஊர் பேரூர். இதில் அடங்கி இருந்த சிறிய கிராமம்தான் 'கோயம்புத்தூர்.’
1865-ம் ஆண்டு முதல் நகராட்சியாக இருந்த கோவை, பிறகு மாநகராட்சியாக மாறியது.
மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதி. அதனால் இங்கு இதம் தரும் பருவநிலை உள்ளது.
பெயர்க்காரணம்:
சங்க இலக்கியம் கூறும் 'கோசர்’ என்பார் வாழ்ந்த இடம். கோசர் என்பது கோயர் என்றாகி, கோயன் + புத்தூர் = கோயம்புத்தூராகி விட்டது.
முதனிலைத் துறை
நெல், கம்பு, சாமை, வரகு,  துவரை, உளுந்து, கொள்ளு, பருத்தி, தேங்காய், மஞ்சள், வாழை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்
தென்னை மிகுதியான மாவட்டம். வெற்றிலை (பொள்ளாச்சி), ஏலக்காய், ரப்பர் (ஆனைமலை) போன்றவை புகழ்பெற்றவை.
பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதி.
இரண்டாம் நிலைத் துறை
பஞ்சாலைகள், பிளேடுகள், வேளாண் மோட்டார் பம்புகள், தொழிற்சாலை இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் (கிரைண்டர்), கட்டுமானக் கம்பிகள் தயாரிப்பு என கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் தொழில் மாவட்டமாகத் திகழ்கிறது.
தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் ('தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’).
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா இடங்கள்: வால்பாறை (வால்பாறை அருகேயுள்ள சின்னக் கல்லார் தமிழ்நாட்டின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகிறது)  ஆனைமலை வனவிலங்குகள் புகலிடம், பொள்ளாச்சி (கோலிவுட் டின் திறந்தவெளி படப்பிடிப்புத் தளம்) டாப் ஸ்லிப், ஆழியார் அணை, வெள்ளியங்கிரிமலை, போலுவம்பட்டிப் பள்ளத்தாக்கு, தடாகம் பள்ளத்தாக்கு.
கோவை கோணியம்மன், மருதமலை முருகன், ஈச்சனாரி விநாயகர் முதலியன வழிபாட்டிடங்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்: சி.சுப்பிரமணியம், ஜி.டி.நாயுடு, கலைக்கதிர் ஜி.ஆர்.தாமோதரன்,   டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார்,  கோவை அய்யாமுத்து (சுதந்திர போராட்ட வீரர், திரைப்பட பாடலாசிரியர்), தோழர் பாலதண்டாயுதம் (கம்யூனிஸ்ட் தலைவர்), நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார்.

நீலகிரி மாவட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நீலகிரி மலையின் பெயரே மாவட்டப் பெயராக அமைந்திருக்கிறது. இந்த மாவட்டம், மைசூர் போருக்குப் பிறகு ஆங்கிலேயேர் கட்டுப்பாட்டில் வந்தது. முன்பு, சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பிறகே ஆங்கிலேயேரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  1868-ம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப் பட்டு, 1882-ல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
தோடர், பனியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் என பழங்குடியினர் அதிகம் வாழும் மாவட்டம்.
முதனிலைத்துறை
தோட்டக்கலைப் பயிர், இஞ்சி, ஆரஞ்சு, மிளகு, உருளைக்கிழங்கு, தேயிலை, கேரட் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
1920இல் தொடங்கப்பட்ட அரசின் பழ ஆராய்ச்சி நிலையம் (குன்னூர்).
இரண்டாம் நிலைத் துறை
எலக்ட்ரானிக் பொருட்கள், புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழில் சாலை (இந்துஸ்தான்), ராணுவத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து மருந்து தொழிற்சாலை (குன்னூர்) யூகலிப்டஸ் நீலகிரி எண்ணெய் தயாரித்தல், சின்கோனா தொழிற்சாலை, ஊசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் (கேத்தி) இம்மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிகளாகும்.
'பைரீத்ரம்' செடியின் பூவிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தாகப்  பயன்படும் 'பைரோசைட்’ எண்ணெய் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா மையங்கள்:  உதக மண்டலம் (மலைகளின் அரசி),  தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி (ஜான் சுலிவன் உருவாக்கியது), தொட்டபெட்டா (2637 மீ), முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பார்க், குன்னுர், கோடநாடு வியூ பாயிண்ட், கோத்தகிரி, கல்லட்டி நீர்வீழ்ச்சி, வென்லாக் சமவெளி.
மேட்டுப்பாளையம்  to ஊட்டி மலை ரயில் பாதை, யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் உலகப்புகழ்பெற்ற பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆராய்ச்சி நிலையம் குன்னூரில் 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
ராணுவ நகரம் வெலிங்டனில், ராணுவத் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி உள்ளன.
உதகை மலர் கண்காட்சி
உதகமண்டலத்தில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். மலர் கண்காட்சி பார்ப்பதற்காக பல வெளிநாட்டவரும் வருகை புரிகின்றனர். இக்கண்காட்சியில் காணவேண்டிய பூக்கள்: பிளாங்கெட் ஃபிளவர், ஸ்வீட் பீ பான்சி, வயோலா, மங்கி பிளவர், கப்பிளவர், பிளாக்பெரி லில்லி, போன்ற 50 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு கேத்தி, இங்கு இருக்கிறது.

ஈரோடு மாவட்டம்
பெரும்பாளையம், காளிங்க ராயன் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளது ஈரோடு. சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பிறகு பாண்டியர்கள் ஆட்சி யின் கீழ் வந்தது.
கோவை மாவட்டத்தைப் பிரித்து 1979, ஆகஸ்ட் 31-ம் தேதி, ஈரோடு மாவட்டம் உதயமானது.  கோவை மாவட்டத்தில் இருந்த பவானி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பெருந்துறை, தாராபுரம் ஆகிய ஆறு வருவாய் வட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.
2008 ஜனவரி 1-ம் தேதி மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. ஈரோடு, தமிழ்நாட்டில் ஐந்தாவது பெரிய மாநகராட்சி.
முதனிலைத்துறை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வேளாண் விளைபொருட்கள் நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. 
ஈரோடு தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் பெரியது.  தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது.
அரசு சந்தனமரக் கிடங்கு (சத்தியமங்கலம்), தேக்கு மரங்கள் (அந்தியூர், பர்கூர்), மூங்கில் காடுகள் (சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்) புகழ் பெற்றவை. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.
இரும்பு (தொப்பம்பாளையம், கரிகொட்டாம்பாளையம், பங்களாபுதூர்), மைக்கா (வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி), கருங்கற்கள் (பாலமலை), ஆஸ்பெஸ்டாஸ் (பெருந்துறை), ஜிப்சம் (தாராபுரம்). குவார்ட்ஸ்  (வெள்ளைக் கல்), பெல்ஸ்பர் (சிவப்புக் கல்) இம்மாவட்டத்தில் கிடைக்கும் முக்கியக் கனிமங்கள்.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத் தொழில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் பேக்டரிகள் அதிகமாக உள்ளன.
தாளவாடி,சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தியும்  பெருந்துறை, சென்னிமலை (போர்வை), தாராபுரம், ஈரோடு, பவானி (ஜமுக்காளம்) ஆகிய இடங்களில் நெசவுத் தொழிலும் நடக்கிறது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள்: பவானி சாகர் அணைக்கட்டு, காவிரியும் பவானியும் கலக்கும் கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை, அரச்சலூர்  கல்வெட்டுகள், பெருந்துறை விஜயமங்கலம், கொடுமணல் புதைபொருள் ஆய்வு இடம், பண்ணாரி மாரியம்மன் கோயில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில், சென்னிமலை முருகன் கோயில்.
குறிப்பிடத்தக்கவர்கள்: ஈ.வெ.ராமசாமி (பெரியார்), கொடிகாத்த குமரன் (சென்னி மலை), தீரன் சின்னமலை (மேலப்பாளையம்).

 தர்மபுரி மாவட்டம்
தர்மபுரியின் சரித்திரப் பெயர் 'தகடூர்’. ஒளவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் ஆண்ட பூமி இது. பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் என பல அரசுகளின் பிடியில் இருந்த தர்மபுரி, முன்பு சோழ மண்டலமாக இருந்தது.
சேலம் மாவட்டத்தில் இருந்த சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, 1965-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004ம் ஆண்டு தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியே உருவாக்கப் பட்டது.
காவிரி நதி, தமிழகத்துக்குள் நுழையும் இடமாக தர்மபுரி அமைந்து இருக்கிறது.  தர்மபுரி தமிழகத்தின் மொத்தப் பரப்பளவில் 3.46% அளவைக் கொண்டது.
மாவட்டச் சிறப்புகள்
முதனிலைத் துறை
மா சாகுபடி இம்மாவட்டத்தில் அதிகம். செந்தூர் மாம்பழங்கள் புகழ்பெற்றவை.
தக்காளி (பாலக்கோடு), மிளகாய் (பெண்ணாகரம்) முக்கியக் காய்கறிகளாகும்.
கறுப்பு கிரானைட் (பெண்ணாகரம், அரூர், பாலக்கோடு), மாலிப்பட்டினம் (அரூர்) ஆகியவை இம்மாவட்டத்தில் கிடைக்கும் முக்கியக் கனிமங்கள்.
இரண்டாம் நிலைத் துறை
பட்டுத் துணி உற்பத்தி, உலோகத் தொழிற்சாலை ஆகியவை உள்ளன.
தீப்பெட்டித் தொழில், ஜவ்வரிசித் தொழில் போன்றவையும் முக்கிய உற்பத்தித் தொழில்கள்.
வேலம்பட்டி உருண்டை வெல்லம் புகழ் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
தாமஸ் மன்ரோ தூண் (தர்மபுரி), ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, சுப்ரமணிய சிவா நினைவிடம் (பாப்பாரப் பட்டி), தீர்த்தமலைக் கோயில், அதியமான் கோட்டை, சென்ராயப் பெருமாள் ஆலயம் (அதியமான் கோட்டை) ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.
குறிப்பிடத்தக்கவர்கள்:  சங்ககால மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி,  பெண்புலவர்   ஒளவையார்,  சுதந்திர போராட்டவீரர் தீர்த்தகிரி கவுண்டர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம்
அதியமான் ஆண்ட தகடூர் பகுதி இங்கு உள்ளது. போர் நடைபெற்றதற்கு அடையாளமாக மதில் சுவர்களுடன் பழமையான சையத் பாட்சா கோட்டை இப்போதும் உள்ளது.
பல்லவர், சோழர், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் பிடியில் கிருஷ்ணகிரி இருந்தது.
1965-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டம் உருவாக்கப் பட்டது. 2004, பிப்ரவரி 9-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், வாழை, நிலக்கடலை, பருப்பு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.
தமிழக கேழ்வரகு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கு மேல் இம்மாவட்டத்திலிருந்தே கிடைக்கிறது.
ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் இம்மாவட்டத்தில் சாகுபடியாகின்றன.
பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பரி இலை சாகுபடியிலும் இம்மாவட்டம் முன்னணியில் உள்ளது.
தேன்கனிக்கோட்டை கறுப்பு கிரானைட், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பாரடைஸ் எனப்படும் பலவண்ண கிரானைட் கற்கள், ஊத்தங்கரையில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல் போன்றவை இம்மாவட்டத்தின் கனிம வளத்திற்குச் சான்றுகளாகும்.
பர்கூர் காளை இனம் புகழ் பெற்றது.
1924ஆம் ஆண்டு ஓசூரிலுள்ள மத்திகிரியில் கால்நடைப்பண்ணை தொடங்கப்பட்டது. இவ்விடம், 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  இப்பண்ணை சுமார் 1674 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு சிந்தி, கிர், ஹல்லி கார், காங்கயம் முதலிய இனங்கள் வளர்க்கப் படுகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஓசூர் தொழிற்பேட்டையில் டைட்டான் கைக்கடிகாரத் தொழிற்சாலை, இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள், வாகனத் தயாரிப்பு மற்றும் மின்னணுத் தொழிற்சாலைகள் போன்றவை அமைந்துள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலாத் தலங்கள் :   மலைகளாலும் குன்றுகளாலும் சூழப்பட்டு குளு குளு பிரதேசமாக இருக்கும் தளி, 'குட்டி இங்கிலாந்து’ என அழைக்கப்படுகிறது.
சூளகிரி சின்னாறு நீர்த்தேக்கம், பாலக்காடு பீடபூமியை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் ராயக்கோட்டை என்ற மலைக்கோட்டை,  மலை மீது அமைந்திருக்கும் சந்திரசூடேஸ்வரர் ஆலயம்.
ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் கிருஷ்ணகிரி மாம்பழத் திருவிழா, மிகவும் பிரபலம்.
குறிப்பிடத்தக்கவர்கள்:சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல், காந்திஜியால் தனது மனசாட்சி என்று வர்ணிக்கப்பட்டவர், மதுவிலக்கை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வர், சக்கரவர்த்தி திருமகன் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மத்திய தொழிற்துறை அமைச்சர், மேற்கு வங்கத்தில் கவர்னராக இருந்தவர் எனப் பல சிறப்புகளைப் பெற்ற மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி இம்மாவட்டத்தில் உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் பூர்வீக ஊரான நொச்சிக்குப்பம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழக மாவட்டங்கள் -3

தஞ்சாவூர் மாவட்டம்
காவிரி பாயும் கவின்மிகு பூமியான தஞ்சை சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்தது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், செல்லப்ப நாயக்கர்,  மராட்டியர் ஆகியோர் ஆண்டனர்.
முதனிலைத் துறை
தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது. செம்மை நெல் சாகுபடிக்கு புகழ் பெற்றது.
இரண்டாம் நிலைத் துறை
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டு போன்றவை புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள்.
மூன்றாம் நிலைத் துறை
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இங்கு உள்ளது.
கலை, இசை, இலக்கியம், நாடகம், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற மாவட்டம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் பிரபலம்.
சனி பகவானுக்கான தனிக்கோயில் (குச்சனூர் சனீஸ்வரர் கோயில்.)
தியாகராஜ சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில், ஜனவரி மாதம் 8 நாட்கள் இசைத் திருவிழா நடைபெறும்.
1000 ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் பெரிய கோயில்.
கர்நாடக இசையின் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு.

வழிபாட்டிடங்கள்:  தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், திருநாகேசுவரம் ஒப்பிலியப்பன் கோயில், பூண்டி மாதா கோயில், வளத்தூர் மசூதி, மாரியம்மன் கோயில், தாராசுரம், திருவையாறு, திருப்பனந்தாள்.
குறிப்பிடத்தக்க பெருமக்கள்
கரந்தை தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்வேள் உமா மகேஸ்வரம் பிள்ளை; நாடகமணி நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை, தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த உ.வே. சுவாமிநாதய்யர், ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்
தமிழக அரசால் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொழி, இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்து அவற்றை வெளியிடுவது; கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை புத்தகமாக வெளியிடுவது; கலைக் களஞ்சியம் தயாரிப்பது; தமிழ்ப் பண்பாட்டை உலகு உணர்த்தும் வண்ணம் ஆய்வு; அருங்காட்சியகம் அமைத்தல்; உலகத் தமிழர்களுடன் உறவு அமைத்தல் அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது. மிகப்பெரிய நூலகம் இங்கு அமைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு இங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் முன்பு சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் தாலுக்காவையும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், கொடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுக்காக்களையும் ஒன்றிணைத்து, 1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உருவாக்கப்பட்டதே இந்த மாவட்டம்.
 முதனிலைத் துறை
இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழில், வேளாண்மை. 120 சதுர கிலோமீட்டர் பரப்பில் முத்துப் பேட்டை சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. முத்துப்பேட்டை தடாகத்தில் 73 வகையான மீன் இனங்கள் காணப்படுகின்றன. நவம்பர், டிசம்பர் மாதங்களில் உலகெங்கிலும் இருந்து முத்துப் பேட்டைக்கு பறவைகள் வருகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஆரூரான் சர்க்கரை ஆலை (வடபாதி மங்கலம்), இரசாயன ஆலை (வடசேரி), அரிசி ஆலைகள், செராமிக் தொழிற்சாலைகள் போன்றவை இம்மாவட் டத்தில் உள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
வடுவூர் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை ஏரி, தியாகராஜ சுவாமிகள் ஆலயம் போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
வடுவூர் பறவைகள் சரணாலயம் 1999ல் உருவாக்கப்பட்டது. வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகம், ஊசி வாழ் வாத்து, நாமக் கோழி, பவளக் கால் உள்ளான், சிறவி போன்றவை வடுவூருக்கு வலசை வரும் பறவைகளில் குறிப்பிடத்த தக்கவை.
தியாகராஜ சுவாமிகள் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தியாகராஜ ஆராதனை’ புகழ் பெற்றது.
மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
தமிழகத் தேர்களில் 'திருவாரூர் தேர்’தான் மிகப் பெரியது. திருவாரூர் தேரை அடிப்படையாக கொண்டே 'வள்ளுவர் கோட்டம்’  அமைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள் : சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் பிறந்த மாவட்டம்.
வலங்கை சண்முகசுந்தரம், திரு.வி.க., ஏ.டி.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, கே.பாலசந்தர், திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதி மங்கலம் ஆரூரான், சர்க்கரை ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, நெடுஞ்செழியன்

நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பண்டைய காலம் தொட்டே துறைமுக நகரமாகஉள்ளது. காவிரிப் பூம்பட்டினம் அழிந்த பிறகு, துறைமுகப் பட்டினமாக விளங்கிய இங்கு புத்தவிகாரைக் கட்டினார், அசோகர்.
சோழர் ஆட்சியில் 'சோழகுலவல்லி பட்டினம்’ என்ற பெயரைப் பெற்றது. சோழர்கள் ஆண்ட இந்தப் பகுதியை, பிறகு  போர்ச்சுக்கீசியருக்குத் தாரை வார்த்தனர். இவர்களுடன் சண்டையிட்டு டச்சுக்காரர்கள் இதனை ஆண்டனர். இதன்பிறகே இந்தப் பகுதி ஆங்கிலேயேரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம், 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தனி மாவட்டமாக உருவெடுத்தது.
முதனிலைத் துறை
நெல் (மயிலாடுதுறை, கொள்ளிடம், நாகப்பட்டினம்), கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் மணிலா, முதலியவை இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள்.
மயிலாடுதுறை தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் புதிய நெல்வகைகளை உருவாக்கியுள்ளது.
கடற்கரை மாவட்டமாதலால் மீன்பிடித் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது.
நரிமனத்தில் பெட்ரோலியம்,சீர்காழி இயற்கைவாயு, கோடியக்கரையில் பழுப்பு நிலக்கிரி, தரங்கம்பாடி கடற்கரை மணலில் இல்மனைட் தாது மற்றும் ஜர்க்கான் தாது போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய கனிம வளங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
உப்பளத்தொழில் நாகை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. நாகப்பட்டினம், வேதாரண்யம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் உப்பு காய்ச்சப்படுகிறது.
வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது.
பட்டுப்புடவை நெய்தல் (கூறைநாடு), பாய்நெய்தல், பிரம்புத் தொழில் (ஆனைக்காரன் சத்திரம்) போன்ற கைத்தொழில்களும் நாகையில் நடைபெறுகிறது. 
மூன்றாம் நிலைத் துறை
திருக்கடையூரின் திருக்கடவூர் தலம் தேவார மூவரால் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதி இத்தலத்தில் பாடப்பெற்றது.
சுற்றுலா இடங்கள்:
காவிரியாறு கடலோடு கலக்கும் இடமே காவிரிப் பூம்பட்டினம், தரங்கம்பாடி 'டேனிஷ் கோட்டை’, கோடியக்கரை வனவிலங்கு புகலிடம் 
நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று’.
வேளாங்கண்ணிக்கு, 'கீழை நாட்டு லூர்டீஸ்’ (Lourdes of the East) என்ற பெயர் உண்டு.
புகழ்பெற்ற நாகூர் தர்க்கா இங்குதான் உள்ளது.
காவிரியின் கடைமடைப் பகுதியான இங்கு, நெல் விளைச்சல் அதிகம்.
இது மறைமலை அடிகள் பிறந்த மாவட்டம்.
நாகை மாவட்டம் இந்து, கிறிஸ் தவ, முஸ்லீம் மக்களின் மதநல்லிணக்க மாவட்டமாக விளங்குகிறது.

கடலூர் மாவட்டம்
 அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், வள்ளலார் வாழ்ந்த வடலூர் என்று பல்வேறு சிறப்புகளை கொண்டது கடலூர்.
பண்டைய காலத்தில் தொண்டை நாடாக விளங்கியது. சென்னையில் இருந்து 183 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது.
ராபர்ட் கிளைவ், தனது நிர்வாகச் செயல்பாடுகளை இந்த மாவட்டத்தில் இருந்துதான் தொடங்கினார்.
1993, செப்டம்பர் 30-ம் தேதி, தென்னாற்காடு மாவட்டம், தென்னாற்காடு வள்ளலார் மற்றும் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளலார்
மாவட்டம்தான், தற்போது கடலூர் மாவட்டமாக விளங்குகிறது.
முதன்மைத்துறை
கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாப்பழமும், முந்திரியும் பெருமளவு விளைகின்றன.பலாப்பழம், முந்திரி, முந்திரி எண்ணெய் போன்றவை களுக்கு பண்ருட்டி புகழ்பெற்றது. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம். அதிக எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் இங்கு விளையும் மணிலா ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தின் முந்திரி அதிகம் விளையும் மாவட்டம்.
இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள், கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு போன்றவையும் குறைந்தளவு பருத்தியும் விளைகின்றன.
சுண்ணாம்புக்கல், உயர் ரக களிமண் (காடாம் புலியூர், பண்ருட்டி), பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் (பணிக்கன் குப்பம்), துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள்(மாமண்டூர்), பழுப்பு நிலக்கரி (நெய்வேலி )  என கடலூர் கனிமவளம் மிகுந்தது.
இரண்டாம் நிலைத் துறை
சர்க்கரை ஆலைகள் (நெல்லிக் குப்பம், பெண்ணாடம்),  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (கடலூர்), முதலிய இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகள் (பண்ருட்டி, கடலூர்), வடலூர் சேஷசாயி தொழிற்சாலை, ஈ.ஐ.டி பாரி சாக்லேட் மற்றும் சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்கூட ஆலைகள் இம்மாவட்டத்தின் முக்கியத் தொழிற்சாலைகள்.
மூன்றாம் நிலைத் துறை
புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், நாட்டிய கலைக் கோயிலாக உள்ளது.
போர்ச்சுக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, கடலூரில்தான் இருக்கிறது.
கடல் நீர் உட்புகுந்து வரும் கழிமுகத்தின் இடையே பரந்து விரிந்து கிடக்கும் சுரப்புன்னைக் காடுகளை கொண்ட 'பிச்சாவரம்’, இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலம்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : 1920ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1929ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை புகழ் பெற்றது. தமிழ்துறையில் சிறந்த தமிழறிஞர்களான பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் பணியாற்றியுள்ளனர். இதுமட்டுமல்லாது தமிழிசை விழிப்பு உணர்விலும், இந்திப் போராட்டத்திலும் இப்பல்கலைக் கழகம் பெரும்பங்கு வகித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம்
 இது, 1993-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதி உதயமானது. தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்த இந்தப் பகுதி, தனியாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, மணிலா, பருத்தி, பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு,  நவதானியங்களும் இம்மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
உப்பு (மரக்காணம்), ஃபயர் க்ளே (திண்டிவனம்), ஸ்டீடைட் தாது (கள்ளக்குறிச்சி), சிலிகா மண் (அகரம் காடுகள்), பிளாக் கிரானைட் (வானுர், திண்டிவனம், செஞ்சி), பலவண்ண கிரானைட் (செஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி), . புளு மெட்டல் போன்றவை இங்கு கிடைக் கும் முக்கிய கனிமங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
சர்க்கரை ஆலைகள் (முண்டியம் பாக்கம், மூங்கில் துறைப் பட்டு, செங்கல்வராயன்), நூற்பாலைகள்,வனஸ்பதி தொழிற்சாலை, இரசாயனக் கலவை உரத் தொழிற்சாலைகள், சிட்கோ தொழிற்கூடங்கள், பாண்ட்ஸ் இந்தியா வாசனை திரவியத் தொழிற்சாலை உள்ளன.
மூன்றாம் நிலைத் துறை
தமிழ்நாட்டின் 2-வது பெரிய மாவட்டமான இங்கு, செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை முக்கியச் சுற்றுலாத் தலங்கள்.
திருநங்கைகளின் குடும்பக் கோயிலான 'கூத்தாண்டவர் கோயில்’ உளுந்தூர் பேட்டை தாலுகாவில் உள்ள கூவாகத்தில் இருக்கிறது.
சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம், மேல் மலையனூர்.
திண்டிவனத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டை 'கிழக்கின் ட்ராய்’ என்று அழைக்கப்படுகிறது.
1677ல் சத்ரபதி சிவாஜியால் செஞ்சிக் கோட்டை கைப்பற்றப்பட்டது. 1691ல் ஒளரங்க சீப்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு ஸ்வரூப்சிங் என்ற ராஜ புத்திரரால் ஆளப்பட்டது. ஸ்வரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கு, தமிழ்நாட்டுப் பாடல்களிலும் இடம் பெற்ற சிறப்புக்குரியவர்.
புகழ்பெற்ற மரக்காணம் கடற்கரை, கோமுகி அணை, சங்க காலப் புலவர் கபிலர் பற்றிய தகவல்கள் இடம்பெற்ற கல்வெட்டு உள்ள திருக்கோவிலூர் போன்றவையும் இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்களாகும்.
மயானக் கொள்ளைத் திருவிழா புகழ்பெற்றது. இங்கு, திருக்கோவிலூர், திருவக்கரை புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்: காஞ்சிப் பெரியவர், நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார், உழைப்பாளர் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சி, திண்டிவனம் இராமமூர்த்தி, திருக்குறள் வி.முனுசாமி, கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழக மாவட்டங்கள் - 2

திருச்சி மாவட்டம்
 தமிழகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இதன் ஒரு பகுதி, ஆரம்பத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்ட பல அரசுகளின் பிடியில் திருச்சி இருந்தது. பிறகு பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
முகலாயர்கள், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள் என அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, எந்த முன்னேற்றமும் அங்கே ஏற்படவில்லை. ஆங்கிலேயரின் பிடிக்குள் வந்த பிறகுதான் திருச்சியின் வளர்ச்சி ஆரம்பமானது. 1948-ம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை சமஸ்தானம், இங்குதான் உள்ளடங்கி இருந்தது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாகத் திகழ்வது திருச்சி மாவட்டம். 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டம்... திருச்சி, கரூர், பெரம்பலூர் என  மூன்று மாவட் டங்களாகப் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
தென்னிந்தியாவிலேயே வாழை அதிகம் உற்பத்தியாகும் மாவட்டம். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் உள்ளது.
சுண்ணாம்புக் கல் (லால்குடி, திருச்சி, மணப்பாறை, மணச்ச நல்லூர்), குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ் பார் (மணச்ச நல்லூர், மணப் பாறை), ஜிப்சம் (லால்குடி), வெள்ளைக் களிமண் (லால்குடி) ஆகியவை முக்கியக கனிமங்கள்.
இரண்டாம் நிலைத் துறை
மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை உற்பத்தி செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனமான BHEL (Bharath Heavy Elecrical Limited) திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது.
'பேப்ரிகேஷன்’ எனப்படும்  கட்டுமானத் தொழிலில் புகழ் பெற்றது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை திருச்சியில் அமைந்துள்ளது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் :  தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமான இங்கு அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை, 329 மீட்டர் நீளமும், 20  மீட்டர் அகலமும் கொண்டது.
இங்கு உள்ள மலைக்கோட்டைப் பாறை, 'உலகிலேயே 3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை’ என்ற பெருமை உடையது. இது, 83 மீட்டர் உயரம் கொண்டது.
குறிப்பிடத் தக்கவர்கள்
சர்.சி.வி.ராமன் (திருவானைக் காவில் பிறந்தவர்), தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் பூர்வீக ஊர் ஸ்ரீரங்கம், எழுத்தாளர் சுஜாதா (பன்முக எழுத்தாளர்), கவிஞர் வாலி.

புதுக்கோட்டை மாவட்டம்
 மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று மாவட்டம் இது. பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் இதை ஆண்டனர். 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொண்டைமான்களின் ஆட்சி ஏற்பட்டது. இது, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு 1948-ம் ஆண்டு வரை நீடித்தது.
1948-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைந்தது. இந்திய யூனியனோடு இணைந்த 565 சமஸ்தானங்களில் முதல் சமஸ்தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 'புதுக்கோட்டை’ திருச்சியின் ஒரு பகுதியாகவே இருந்தது.
1974-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி,  திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பழங்கள், இங்கு அதிகம் விளைகின்றன. 
அரசின் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை குடுமியான் மலையில் அமைந்துள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
பனைபொருட்கள் தயாரிப்பு (பேரையூர்), புதுக்கோட்டை தொழில் வளாகம், கெமிக்கல் தொழில் சாலைகள் (அறந்தாங்கி, மாத்தூர்) போன்றவை முக்கியத் தொழில் வளங்கள்.
மூன்றாம் நிலைத் துறை
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றி வரையப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் புகழ் பெற்றவை.
9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்த்தாமலை குடைவரைக் கோயில்கள், வேள்விக்குடி செப்பேடுகள், கொடும்பாளூர் மூவர் கோயில்கள், குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகள் எனப் புதுக்கோட்டை பல வரலாற்றுச் சான்றுகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
குடுமியான் மலை சிவன் கோயில் இசைக் கல்வெட்டுகள் புகழ் பெற்றவை. மகேந்திரவர்ம பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து இக்கல்வெட்டுக்கள் கூறுகிறது.
திருக்கோகர்ணத்தில் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தில் மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு தொடர்பான பல பிரிவுகளில் ஏராளமான வரலாற்று ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில், விஜயாலய சோழனால் கட்டப்பட்டது.
தீரர் சத்தியமூர்த்தி இங்கு பிறந்தார்.
குடுமியான் மலைக் கல்வெட்டுகள் இசைக் கலையைப் போற்றுகின்றன.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் 'லேட்டரைட்’ கனிமம் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம்
 பெரம்பலூர் மாவட்டம், 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதனால், இதன் வரலாறு திருச்சியோடு தொடர்புடையதுதான். 2001-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2002-ல் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பிறகு 2007-ல் மீண்டும் அரியலூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
நெல், கடலை, கரும்பு, கம்பு, முந்திரி ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
கனிமம் அதிகம் கிடைக்கும் மாவட்டம் இது. சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், ஜிப்சம், நிலக்கரி, அரளைக் கற்கள் இங்கே அதிகம் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற் சாலை இங்குள்ளது.
துறையூர் சுருட்டு புகழ்பெற்றது.
மரச்சிற்பங்கள் தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
மூன்றாம் நிலைத் துறை
முக்கிய இடங்கள் : சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயில்,  லப்பைக்குடிக்காடு பெரிய தர்கா ஆகியவை இங்கிருக்கும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள்.
தொல்லுயிர்ப் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்ட தொல்லூர் சாத்தனூர் மரப்படிவங்கள் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940ம் ஆண்டு முதல் முதலாக விவரிக்கப்பட்டன. இந்த தொல் படிவங்கள் 'கோனிபர்’ (சிஷீஸீவீயீமீக்ஷீ) வகையைச் சார்ந்தவை.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே 1751ல் வலிகொண்டா போர் நிகழ்ந்த ரஞ்சக் குடிக் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மூன்றடுக்கு கொண்ட கோட்டைச் சுவர், நிலவறை, மசூதி, கொடிக் கம்பம் போன்ற பலவற்றைக் கொண்டுள்ள ரஞ்சக்குடி கோட்¬ ட தற்போது இந்திய அகழ்வாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெரம்பலூரில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாடபுரம் என்னும் கிராமத்தின் அருகில் பச்சை மலையில் அமைந்துள்ள மயில் ஊற்று அருவி புகழ் பெற்றது.
வெள்ளாறு,  கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் இந்த மாவட்டத்தில் சித்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் பலரை தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளை நோக்கிப் படையெடுக்க வைத்தவரும், சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை முதலமைச்சரிடமிருந்து பெற்றவருமான பெரம்பலூர் மாவட்ட தற்போதைய  ஆட்சியருமான தாரேஸ் அஹமது ஐ.ஏ.எஸ். இம்மாவட்டச் செய்தியில் தவிர்க்க முடியாதவர்.

அரியலூர் மாவட்டம்
 ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர் மோதலின் களமாக இருந்தது அரியலூர் மாவட்டம். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, 1801-ல் ஆங்கிலேயர் பிடியில் 'திருச்சி’ தனி மாவட்டமாக ஆனது. 1995-ம் ஆண்டு திருச்சி பிரிக்கப்பட்டு, பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன.
2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது, அப்போது இருந்த தி.மு.க. அரசு. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு, 2002, மார்ச் 31-ம் தேதி பொருளாதாரத்தைக் காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தை மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைத்தது.
2006-ல் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு, 2007, நவம்பர் 23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. இங்கு சிமென்ட் ஆலைகள் அதிகம் உள்ளதால் சிமென்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அரிய தகவல்கள்
அரியலூர் சுமார் இலட்சம் ஆண்டுகள் முன்பு கடலாக இருந்தது என்பது புவியியல் வல்லுனர்களின் கருத்து.
கல்லமேடு என்ற இடத்தில்  60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் எலும்புக் கூடு கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப் பட்டது.
அரியலூருக்கு அருகில் சாத்த னூரில் காணப்படும் தொல்லுயிர் எச்சப் படிமமான  16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட கல்மரம் இருக்கிறது. இது 12 கோடி ஆண்டுகள் பழமையானது.
1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார்.
முதனிலைத் துறை
கரும்பு, முந்திரி இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள்.
பச்சைமலையில் வாழும் மலைவாழ் மக்கள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.
இரண்டாம் நிலைத் துறை
சிமென்ட் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம்.
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலை, மணலேரி அரசு  சிமென்ட் தொழிற்சாலை உட்பட 5  சிமென்ட் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி உற்பத்திக்குப் புகழ் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
கடற்கரை இல்லாத மாவட்டம்.
தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், பெரிய கோயிலை போன்றே கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் இங்கு உள்ளது.
'தேம்பாவணி’ எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.

கரூர் மாவட்டம்
கரூர், கொங்கு நாட்டின் ஒரு பகுதி. 'கருவூர்’ என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட கரூருக்கு, 'வஞ்சி மாநகரம்’ என்ற பெயரும் உண்டு. கிரேக்க அறிஞர் தாலமி கரூரை தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு வாணிப மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சேரர்களின் தலை நகராக விளங்கியது. பிறகு பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கரூர், ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. நாயக்கர்கள், திப்பு சுல்தான் பிடியிலும் கரூர் இருந்தது.
காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, நங்கன்ஜி ஆறு, கீழ் பவானி போன்றவை இம்மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகள்.
1995, செப்டம்பர் 30-ம் தேதி, திருச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை கொண்டு, கரூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
தமிழக அரசின் கல் குவாரி தொழிற்சாலை இங்குள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
கரூர் கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
கைத்தறி நெசவு (அரவக்குறிச்சி), தோல் பதனிடுதல் (பள்ளப்பட்டி), சாயமேற்றுதல் (கரூர், அரவக்குறிச்சி), கல்சிற்ப வேலைகள் (சின்னத்தாராபுரம்) போன்ற தொழில்களில் கரூர் சிறந்து விளங்குகிறது.
புகளூரில் அமைந்துள்ள  தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனத்தில் (ஜிழிறிலி)  கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலை 785 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது.
பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக கரூர் விளங்குகிறது.
ஏற்றுமதி தரத்தில் கொசுவலை உற்பத்தி ஆகின்றன.
பாரம்பரியத் தொழிலான ரத்தினக் கல் வியாபாரத்துக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
அனைத்து வாகனங்களுக்குத் தேவையான செயின் தொழிற்சாலை இங்கு உள்ளது.
செட்டி நாடு சிமென்ட் ஆலை 1962ல் புலியூர் பகுதியில் தொடங்கப் பட்டது.
நவீன அரிசி ஆலைகள், பித்தளைப் பாத்திரத் தயாரிப்பு போன்றவையும் இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் துறை
குறிப்பிடத்தக்க இடங்கள்: திருகடம்பந்துறை கடம்பவனநாதர் கோயில், சுந்தரர் பதிகம் பாடிய திருவெஞ்சமாக்கூடல் விகிர்த நாதேசுவரர் தலம், மரகதாசலர் கோயில், கல்யாண வெங்கட ராமசாமி ஆலயம், தாந்தோணி (தென் திருப்பதி என அழைக்கப் படுகிறது), பசுபதேஸ்வரர் ஆலயம் (சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது).
குறிப்பிடத்தக்கவர்கள்: திருவி சைப்பா பாடிய ஒன்பதின்மர்களில் ஒருவரான கருவூர்த் தேவர் பிறந்த மாவட்டம்.

நாமக்கல் மாவட்டம்
 நாமக்கல், கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததற்கு வரலாறுகள் உண்டு. தகடூர் அதியமான் ஆட்சியைத் தொடர்ந்து கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
சேந்தமங்கலத்தை தலைமை யிடமாக கொண்டு ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்தபோதுதான், நாமக்கல் கோட்டை கட்டப்பட்டது.
1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, சேலம் மாவட்டத்திலிருந்து 'நாமக்கல்’ மாவட்டம் உருவாக்கப் பட்டது.
முதனிலைத் துறை
நாமக்கல் மாவட்டத்தில் பரவியுள்ள மலைகள் 'தால்காட் மலைகள்’ எனப்படும். இம்மாவட்டத்தில்  பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை,  சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை காணப்படுகிறது.
முட்டைக் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் தென்னிந்தியாவிலேயே முக்கிய இடம் வகிக்கிறது.
சுண்ணாம்புக்கல், கல்நார்  போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய கனிம வளங்களாகும்.
நெல், கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி ஆகியவை இம்மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
கைத்தறி மற்றும் விசைத்தறி, வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் (திருச்செங்கோடு), பொறியியல் தொழில்கள், சர்க்கரைத் தொழிற்சாலை (மோகனுர்), சேஷாயி காகிதத் ஆலை (பள்ளிபாளையம) நூற்பு ஆலைகள் (திருச்செங்கோடு, குமாரபாளையம்) ஆகியவை முக்கிய தொழில்களாகும்.
மூன்றாம் நிலைத் துறை
திருச்செங்கோட்டுப்பதி என்று புகழப்படும் திருச்செங்கோடு கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவத்தலங்களுள் ஒன்று. தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் திருச்செங்கோடு 'கொடிமாடச் செங்குன்றுர்’ என்று குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலா இடங்கள்:
கொல்லிமலை, ஆகாய கங்கை அருவி (உயரம் 130 அடி); நாமக்கல் கோட்டை கோயில்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீகந்தசாமி கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தீரன் சின்னமலை,  சிலம்பொலி செல்லப்பன்.
இந்தப் பகுதி கோழி வளர்ப்புக்குப் பெயர் பெற்றதால், தமிழகத்தின் 'கோழிப் பண்ணை மாவட்டம்’ எனப் பெயர் பெற்றது.
சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொண்ட கொல்லிமலை இங்கு உள்ளது.  இது, 1,190 மீட்டர் உயரமும், 70  கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.
மினி பேருந்துகளும் லாரிகளும் அதிக அளவில் இயங்கும் மாவட்டம் இது.
நாமக்கல் நகராட்சி, ஆசியாவின் முதல் மிஷிளி - 14001-2004 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
200 அடி உயரத்தில் ஒரே கல்லிலான ஆஞ்சநேயர் சிலை, இங்கு அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம்
 நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு, இதுதான் தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம். இது, கொங்குநாட்டின் ஒரு பகுதி.
பண்டைய காலத்தில் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்தது. பிறகு சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியில்தான் இது உருவாக்கப்பட்டது.  இ.ஆர்.ஹார் கிரேவ் கலெக்டராக இருந்தபோதுதான் இதற்கு 'சேலம் மாவட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, மாம்பழம், ரோஜா, மல்லிகை,  காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, பழவகைகள் ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இதற்கு, 'மாங்கனி நகரம்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு.இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.
இரும்புத் தாது (கஞ்சமலை, தீர்த்தமலை), அலுமினியம் (சேர்வராயன் மலை), மாக்னசைட் , பாக்சைட் போன்ற தாதுக்கள் இம்மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றது.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத்தொழில் தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும்.  அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது.
'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.
உடையாபட்டி, ஆத்தூர், குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் நுற்பு ஆலைகள் உள்ளன.
சங்ககிரியில் இந்தியா சிமென்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மேட்டூரில் தொழிற்பேட்டைகளும் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் மிகுதி.
மூன்றாம் நிலைத் துறை
'ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏரி, அண்ணா பூங்கா, லேடிசீட் தொலைநோக்கி, பகோடா மலை முகடு, கிள்ளியூர் அருவி, கரடிக்குகை ஏற்காட்டில் காண வேண்டிய இடங்களாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும்  கோடை விழாவில் மலர்க்காட்சி சிறப்பானது. மாவட்டத்தின் பழங்குடி மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
மோகன் குமாரமங்கலம் (முன்னாள் அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் ),  நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், க.இராசாராம், சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார், 'கலைமகள்’ கி.வா.ஜகன்னாதன்.