Friday, 24 January 2014

தமிழக மாவட்டங்கள் - 2

திருச்சி மாவட்டம்
 தமிழகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இதன் ஒரு பகுதி, ஆரம்பத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்தது. தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்ட பல அரசுகளின் பிடியில் திருச்சி இருந்தது. பிறகு பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
முகலாயர்கள், விஜயநகர பேரரசர்கள், நாயக்கர்கள் என அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது, எந்த முன்னேற்றமும் அங்கே ஏற்படவில்லை. ஆங்கிலேயரின் பிடிக்குள் வந்த பிறகுதான் திருச்சியின் வளர்ச்சி ஆரம்பமானது. 1948-ம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை சமஸ்தானம், இங்குதான் உள்ளடங்கி இருந்தது.
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாகத் திகழ்வது திருச்சி மாவட்டம். 1995ம் ஆண்டு திருச்சி மாவட்டம்... திருச்சி, கரூர், பெரம்பலூர் என  மூன்று மாவட் டங்களாகப் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
தென்னிந்தியாவிலேயே வாழை அதிகம் உற்பத்தியாகும் மாவட்டம். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் உள்ளது.
சுண்ணாம்புக் கல் (லால்குடி, திருச்சி, மணப்பாறை, மணச்ச நல்லூர்), குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ் பார் (மணச்ச நல்லூர், மணப் பாறை), ஜிப்சம் (லால்குடி), வெள்ளைக் களிமண் (லால்குடி) ஆகியவை முக்கியக கனிமங்கள்.
இரண்டாம் நிலைத் துறை
மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை உற்பத்தி செய்யும் மத்திய பொதுத்துறை நிறுவனமான BHEL (Bharath Heavy Elecrical Limited) திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது.
'பேப்ரிகேஷன்’ எனப்படும்  கட்டுமானத் தொழிலில் புகழ் பெற்றது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை திருச்சியில் அமைந்துள்ளது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் :  தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமான இங்கு அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை, 329 மீட்டர் நீளமும், 20  மீட்டர் அகலமும் கொண்டது.
இங்கு உள்ள மலைக்கோட்டைப் பாறை, 'உலகிலேயே 3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறை’ என்ற பெருமை உடையது. இது, 83 மீட்டர் உயரம் கொண்டது.
குறிப்பிடத் தக்கவர்கள்
சர்.சி.வி.ராமன் (திருவானைக் காவில் பிறந்தவர்), தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் பூர்வீக ஊர் ஸ்ரீரங்கம், எழுத்தாளர் சுஜாதா (பன்முக எழுத்தாளர்), கவிஞர் வாலி.

புதுக்கோட்டை மாவட்டம்
 மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று மாவட்டம் இது. பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் இதை ஆண்டனர். 17-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொண்டைமான்களின் ஆட்சி ஏற்பட்டது. இது, இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பிறகு 1948-ம் ஆண்டு வரை நீடித்தது.
1948-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைந்தது. இந்திய யூனியனோடு இணைந்த 565 சமஸ்தானங்களில் முதல் சமஸ்தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது 'புதுக்கோட்டை’ திருச்சியின் ஒரு பகுதியாகவே இருந்தது.
1974-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி,  திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பழங்கள், இங்கு அதிகம் விளைகின்றன. 
அரசின் விவசாயப் பண்ணையான அண்ணா பண்ணை குடுமியான் மலையில் அமைந்துள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
பனைபொருட்கள் தயாரிப்பு (பேரையூர்), புதுக்கோட்டை தொழில் வளாகம், கெமிக்கல் தொழில் சாலைகள் (அறந்தாங்கி, மாத்தூர்) போன்றவை முக்கியத் தொழில் வளங்கள்.
மூன்றாம் நிலைத் துறை
கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றி வரையப்பட்ட சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் புகழ் பெற்றவை.
9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்த்தாமலை குடைவரைக் கோயில்கள், வேள்விக்குடி செப்பேடுகள், கொடும்பாளூர் மூவர் கோயில்கள், குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகள் எனப் புதுக்கோட்டை பல வரலாற்றுச் சான்றுகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
குடுமியான் மலை சிவன் கோயில் இசைக் கல்வெட்டுகள் புகழ் பெற்றவை. மகேந்திரவர்ம பல்லவன் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்ததைக் குறித்து இக்கல்வெட்டுக்கள் கூறுகிறது.
திருக்கோகர்ணத்தில் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள அரசு அருங்காட்சியகத்தில் மானுடவியல், கல்வெட்டியல், வரலாறு தொடர்பான பல பிரிவுகளில் ஏராளமான வரலாற்று ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில், விஜயாலய சோழனால் கட்டப்பட்டது.
தீரர் சத்தியமூர்த்தி இங்கு பிறந்தார்.
குடுமியான் மலைக் கல்வெட்டுகள் இசைக் கலையைப் போற்றுகின்றன.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் 'லேட்டரைட்’ கனிமம் இங்கு மிகுதியாகக் கிடைக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம்
 பெரம்பலூர் மாவட்டம், 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. அதனால், இதன் வரலாறு திருச்சியோடு தொடர்புடையதுதான். 2001-ம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2002-ல் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பிறகு 2007-ல் மீண்டும் அரியலூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
நெல், கடலை, கரும்பு, கம்பு, முந்திரி ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
கனிமம் அதிகம் கிடைக்கும் மாவட்டம் இது. சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், ஜிப்சம், நிலக்கரி, அரளைக் கற்கள் இங்கே அதிகம் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற் சாலை இங்குள்ளது.
துறையூர் சுருட்டு புகழ்பெற்றது.
மரச்சிற்பங்கள் தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
மூன்றாம் நிலைத் துறை
முக்கிய இடங்கள் : சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், செட்டிக்குளம் பால தண்டாயுதபாணி கோயில்,  லப்பைக்குடிக்காடு பெரிய தர்கா ஆகியவை இங்கிருக்கும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள்.
தொல்லுயிர்ப் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்ட தொல்லூர் சாத்தனூர் மரப்படிவங்கள் இந்திய தொல்லியல் துறையைச் சார்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940ம் ஆண்டு முதல் முதலாக விவரிக்கப்பட்டன. இந்த தொல் படிவங்கள் 'கோனிபர்’ (சிஷீஸீவீயீமீக்ஷீ) வகையைச் சார்ந்தவை.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே 1751ல் வலிகொண்டா போர் நிகழ்ந்த ரஞ்சக் குடிக் கோட்டை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மூன்றடுக்கு கொண்ட கோட்டைச் சுவர், நிலவறை, மசூதி, கொடிக் கம்பம் போன்ற பலவற்றைக் கொண்டுள்ள ரஞ்சக்குடி கோட்¬ ட தற்போது இந்திய அகழ்வாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெரம்பலூரில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாடபுரம் என்னும் கிராமத்தின் அருகில் பச்சை மலையில் அமைந்துள்ள மயில் ஊற்று அருவி புகழ் பெற்றது.
வெள்ளாறு,  கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் இந்த மாவட்டத்தில் சித்தமல்லி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் பலரை தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளை நோக்கிப் படையெடுக்க வைத்தவரும், சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை முதலமைச்சரிடமிருந்து பெற்றவருமான பெரம்பலூர் மாவட்ட தற்போதைய  ஆட்சியருமான தாரேஸ் அஹமது ஐ.ஏ.எஸ். இம்மாவட்டச் செய்தியில் தவிர்க்க முடியாதவர்.

அரியலூர் மாவட்டம்
 ஹைதர் அலி, திப்பு சுல்தான், ஆங்கிலேயர் மோதலின் களமாக இருந்தது அரியலூர் மாவட்டம். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, 1801-ல் ஆங்கிலேயர் பிடியில் 'திருச்சி’ தனி மாவட்டமாக ஆனது. 1995-ம் ஆண்டு திருச்சி பிரிக்கப்பட்டு, பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன.
2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது, அப்போது இருந்த தி.மு.க. அரசு. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு, 2002, மார்ச் 31-ம் தேதி பொருளாதாரத்தைக் காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தை மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைத்தது.
2006-ல் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு, 2007, நவம்பர் 23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியது. இங்கு சிமென்ட் ஆலைகள் அதிகம் உள்ளதால் சிமென்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அரிய தகவல்கள்
அரியலூர் சுமார் இலட்சம் ஆண்டுகள் முன்பு கடலாக இருந்தது என்பது புவியியல் வல்லுனர்களின் கருத்து.
கல்லமேடு என்ற இடத்தில்  60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் எலும்புக் கூடு கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப் பட்டது.
அரியலூருக்கு அருகில் சாத்த னூரில் காணப்படும் தொல்லுயிர் எச்சப் படிமமான  16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட கல்மரம் இருக்கிறது. இது 12 கோடி ஆண்டுகள் பழமையானது.
1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார்.
முதனிலைத் துறை
கரும்பு, முந்திரி இம்மாவட்டத்தின் முக்கிய பயிர்கள்.
பச்சைமலையில் வாழும் மலைவாழ் மக்கள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர். இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.
இரண்டாம் நிலைத் துறை
சிமென்ட் உற்பத்திக்கு பெயர் பெற்ற மாவட்டம்.
டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலை, மணலேரி அரசு  சிமென்ட் தொழிற்சாலை உட்பட 5  சிமென்ட் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி உற்பத்திக்குப் புகழ் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
கடற்கரை இல்லாத மாவட்டம்.
தஞ்சைப் பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன், பெரிய கோயிலை போன்றே கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் இங்கு உள்ளது.
'தேம்பாவணி’ எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம் உள்ளது.

கரூர் மாவட்டம்
கரூர், கொங்கு நாட்டின் ஒரு பகுதி. 'கருவூர்’ என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட கரூருக்கு, 'வஞ்சி மாநகரம்’ என்ற பெயரும் உண்டு. கிரேக்க அறிஞர் தாலமி கரூரை தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு வாணிப மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் சேரர்களின் தலை நகராக விளங்கியது. பிறகு பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. பல்லவ அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்த கரூர், ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. நாயக்கர்கள், திப்பு சுல்தான் பிடியிலும் கரூர் இருந்தது.
காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, நங்கன்ஜி ஆறு, கீழ் பவானி போன்றவை இம்மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகள்.
1995, செப்டம்பர் 30-ம் தேதி, திருச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கரூர், குளித்தலை மற்றும் மணப்பாறை தாலுக்காக்களை கொண்டு, கரூர் மாவட்டம் உதயமானது.
முதனிலைத் துறை
தமிழக அரசின் கல் குவாரி தொழிற்சாலை இங்குள்ளது.
இரண்டாம் நிலைத் துறை
கரூர் கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
கைத்தறி நெசவு (அரவக்குறிச்சி), தோல் பதனிடுதல் (பள்ளப்பட்டி), சாயமேற்றுதல் (கரூர், அரவக்குறிச்சி), கல்சிற்ப வேலைகள் (சின்னத்தாராபுரம்) போன்ற தொழில்களில் கரூர் சிறந்து விளங்குகிறது.
புகளூரில் அமைந்துள்ள  தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனத்தில் (ஜிழிறிலி)  கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலை 785 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது.
பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக கரூர் விளங்குகிறது.
ஏற்றுமதி தரத்தில் கொசுவலை உற்பத்தி ஆகின்றன.
பாரம்பரியத் தொழிலான ரத்தினக் கல் வியாபாரத்துக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
அனைத்து வாகனங்களுக்குத் தேவையான செயின் தொழிற்சாலை இங்கு உள்ளது.
செட்டி நாடு சிமென்ட் ஆலை 1962ல் புலியூர் பகுதியில் தொடங்கப் பட்டது.
நவீன அரிசி ஆலைகள், பித்தளைப் பாத்திரத் தயாரிப்பு போன்றவையும் இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில்கள்.
மூன்றாம் நிலைத் துறை
குறிப்பிடத்தக்க இடங்கள்: திருகடம்பந்துறை கடம்பவனநாதர் கோயில், சுந்தரர் பதிகம் பாடிய திருவெஞ்சமாக்கூடல் விகிர்த நாதேசுவரர் தலம், மரகதாசலர் கோயில், கல்யாண வெங்கட ராமசாமி ஆலயம், தாந்தோணி (தென் திருப்பதி என அழைக்கப் படுகிறது), பசுபதேஸ்வரர் ஆலயம் (சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தது).
குறிப்பிடத்தக்கவர்கள்: திருவி சைப்பா பாடிய ஒன்பதின்மர்களில் ஒருவரான கருவூர்த் தேவர் பிறந்த மாவட்டம்.

நாமக்கல் மாவட்டம்
 நாமக்கல், கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததற்கு வரலாறுகள் உண்டு. தகடூர் அதியமான் ஆட்சியைத் தொடர்ந்து கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்பு சுல்தான் ஆகியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
சேந்தமங்கலத்தை தலைமை யிடமாக கொண்டு ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்தபோதுதான், நாமக்கல் கோட்டை கட்டப்பட்டது.
1997-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, சேலம் மாவட்டத்திலிருந்து 'நாமக்கல்’ மாவட்டம் உருவாக்கப் பட்டது.
முதனிலைத் துறை
நாமக்கல் மாவட்டத்தில் பரவியுள்ள மலைகள் 'தால்காட் மலைகள்’ எனப்படும். இம்மாவட்டத்தில்  பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை,  சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை காணப்படுகிறது.
முட்டைக் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் தென்னிந்தியாவிலேயே முக்கிய இடம் வகிக்கிறது.
சுண்ணாம்புக்கல், கல்நார்  போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய கனிம வளங்களாகும்.
நெல், கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி ஆகியவை இம்மாவட்டத்தில் அதிகம் பயிரிடப்படுகின்றன.
இரண்டாம் நிலைத் துறை
கைத்தறி மற்றும் விசைத்தறி, வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் (திருச்செங்கோடு), பொறியியல் தொழில்கள், சர்க்கரைத் தொழிற்சாலை (மோகனுர்), சேஷாயி காகிதத் ஆலை (பள்ளிபாளையம) நூற்பு ஆலைகள் (திருச்செங்கோடு, குமாரபாளையம்) ஆகியவை முக்கிய தொழில்களாகும்.
மூன்றாம் நிலைத் துறை
திருச்செங்கோட்டுப்பதி என்று புகழப்படும் திருச்செங்கோடு கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவத்தலங்களுள் ஒன்று. தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் திருச்செங்கோடு 'கொடிமாடச் செங்குன்றுர்’ என்று குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலா இடங்கள்:
கொல்லிமலை, ஆகாய கங்கை அருவி (உயரம் 130 அடி); நாமக்கல் கோட்டை கோயில்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், திருச்செங் கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீகந்தசாமி கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தீரன் சின்னமலை,  சிலம்பொலி செல்லப்பன்.
இந்தப் பகுதி கோழி வளர்ப்புக்குப் பெயர் பெற்றதால், தமிழகத்தின் 'கோழிப் பண்ணை மாவட்டம்’ எனப் பெயர் பெற்றது.
சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொண்ட கொல்லிமலை இங்கு உள்ளது.  இது, 1,190 மீட்டர் உயரமும், 70  கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது.
மினி பேருந்துகளும் லாரிகளும் அதிக அளவில் இயங்கும் மாவட்டம் இது.
நாமக்கல் நகராட்சி, ஆசியாவின் முதல் மிஷிளி - 14001-2004 தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.
200 அடி உயரத்தில் ஒரே கல்லிலான ஆஞ்சநேயர் சிலை, இங்கு அமைந்துள்ளது.

சேலம் மாவட்டம்
 நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு, இதுதான் தமிழ்நாட்டின் பெரிய மாவட்டம். இது, கொங்குநாட்டின் ஒரு பகுதி.
பண்டைய காலத்தில் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்தது. பிறகு சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. ஆங்கிலேயரின் ஆட்சியில்தான் இது உருவாக்கப்பட்டது.  இ.ஆர்.ஹார் கிரேவ் கலெக்டராக இருந்தபோதுதான் இதற்கு 'சேலம் மாவட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, மாம்பழம், ரோஜா, மல்லிகை,  காப்பி, பாக்கு, நிலக்கடலை, வெற்றிலை, பழவகைகள் ஆகியவை முக்கிய வேளாண் பயிர்கள்.
தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இதற்கு, 'மாங்கனி நகரம்’ என்ற சிறப்புப் பெயர் உண்டு.இந்தியாவிலேயே அதிகமான ஜவ்வரிசி இம்மாவட்த்தில்தான் உற்பத்தியாகின்றது.
இரும்புத் தாது (கஞ்சமலை, தீர்த்தமலை), அலுமினியம் (சேர்வராயன் மலை), மாக்னசைட் , பாக்சைட் போன்ற தாதுக்கள் இம்மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றது.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத்தொழில் தமிழ்நாட்டிலேயே அதிகமான கைத்தறிகள் உள்ள மாவட்டம் சேலம் மாவட்டமாகும்.  அம்மாப்பேட்டை கூட்டுறவு சங்கம் புகழ்பெற்றது.
'தமிழ்நாடு பால்பண்ணைத் தொழில் வளர்ச்சிக் கழகம்' சேலத்தில் பெரிய அளவில் பாலைப் பாதுகாக்க குளிர்ப்பதன வசதி செய்து பல்வேறு இடங்களுக்கும் அனுப்புகிறது.
உடையாபட்டி, ஆத்தூர், குமாரபாளையம், மேட்டூர் ஆகிய இடங்களில் நுற்பு ஆலைகள் உள்ளன.
சங்ககிரியில் இந்தியா சிமென்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மேட்டூரில் தொழிற்பேட்டைகளும் இரசாயனப் பொருள் தொழிற்சாலை, அலுமினியத் தொழிற்சாலை, முலாம் பூசும் தொழிற்சாலை, சந்தன எண்ணெய்த் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகள் மிகுதி.
மூன்றாம் நிலைத் துறை
'ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு சேர்வராயன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏரி, அண்ணா பூங்கா, லேடிசீட் தொலைநோக்கி, பகோடா மலை முகடு, கிள்ளியூர் அருவி, கரடிக்குகை ஏற்காட்டில் காண வேண்டிய இடங்களாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும்  கோடை விழாவில் மலர்க்காட்சி சிறப்பானது. மாவட்டத்தின் பழங்குடி மக்கள் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்:
மோகன் குமாரமங்கலம் (முன்னாள் அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் ),  நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், க.இராசாராம், சேலம் வழக்கறிஞர் விஜயராகவாச்சாரியார், 'கலைமகள்’ கி.வா.ஜகன்னாதன்.

தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள்
எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, டாக்டர் க. பிரபு
 தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை காலம் தோறும் மாறி வந்துள்ளது. 1872ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, மெட்ராஸ் ராஜதானியில் 21 மாவட்டங்களும், 5 மன்னர் ஆட்சிப் பகுதிகளும் இருந்தன. 1941ல் இந்த எண்ணிக்கை 25 மாவட்டங்கள், 5 மன்னர் ஆட்சி பகுதிகள் என உயர்ந்தது. 1951ஆம் ஆண்டு நிலவரப்படி மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26. மெட்ராஸ் மாகாணம், 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி 1956, நவம்பர் 1 ஆம் தேதியன்று தமிழ் மொழி பேசும் மெட்ராஸ் மாநிலமாக உருவானது.
1961ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆகும். 1967ல் ஜூலை 18ஆம் நாள் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம்-1968 என்று அழைக்கப்படுகிறது.
தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா இருந்த போது, 1969, ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. 1971, 81, 91, 2001ல் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை முறையே, 14, 16, 21, 30 ஆகும். 2008ல் இந்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் 32வது மாவட்டமாக உருவானது திருப்பூர் ஆகும்.
இங்கு தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களின் விவரங்கள் தமிழக வரைபடத்தில் தெற்கிலிருந்து வடக்காக அவை இடம் பெற்றுள்ள வரிசையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தெற்கு மாவட்டங்கள் என்றும், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் என்றும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகியவை மேற்கு மாவட்டங்கள் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் போன்றவை கிழக்கு மாவட்டங்கள் என்றும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகியவை வடக்கு மாவட்டங்கள் என்றும் கருதப்படுகின்றன.
இந்த அடிப்படையில் இங்கு மாவட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கியத்துவமும், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத்துறைகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள நிர்வாக பிரிவுகள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றோடு அம்மாவட்டத்தோடு தொடர்புடையவர்களில் ஒருவரின் புகைப்படம், அந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நபராக (மிநீஷீஸீ) அந்த மாவட்டத்தின் விவரத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நபரை தெரிவு செய்து இடம் பெறச் செய்யும்போது, ஒட்டு மொத்த தேசிய அளவில் பல துறைகளில் தமிழகத்தை முன்னிறுத்தியவர்களின் பங்களிப்பையும், சீர்தூக்கிப் பார்த்து மாவட்டத்துக்கு உரிய நபராக அவரை தேர்வு செய்து தந்துள்ளோம்.
உங்கள் மாவட்டத்திற்கான அந்த குறிப்பிடத்தக்க நபர் யார்? என்பதைத் தெரிந்து கொள்ள பக்கங்களைப் புரட்டுங்கள்.
 கன்னியாகுமரி மாவட்டம்
அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, ஆரம்ப காலத்தில் சேர, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
'வேணாடு’ என அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டது.  திருவிதாங்கூர் ஆதிக்கத்தின் கீழும் இடம்பெற்றிருந்தது. மார்த்தாண்ட வர்மா காலத்துக்குப் பிறகு, ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைந்தது.
1956, நவம்பர் 1-ம் தேதி முதல் மாவட்டமாக அங்கீகாரம் பெற்றது.
முதனிலைத் துறை நெல், தேங்காய், ரப்பர், தேயிலை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ரப்பர் மரங்கள் மிகுந்த மாவட்டம்.
டைட்டானியம், தோரியம், மோனோசைட் இம்மாவட்ட கடற்கரை மணலில் காணப்படும் கனிமங்கள்.
மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் சேலம் மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கும் மாவட்டம் கன்னியாகுமரி.
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத் துக்கு அடுத்து அடர்ந்த வனப்பகுதி கொண்ட கன்னியாகுமரி 32% வனப்பரப்பு கொண்டது.
நெல் கன்னிப்பூ (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மற்றும் கும்பப் பூ (செப்டம்பர் முதல் நவம்பர் வரை) என இரு பருவங்களில் பயிரிடப்படுகிறது.
இரண்டாம் நிலைத் துறை
ரப்பர் தொழிற்சாலைகள், உப்பு பதனிடுதல், விசைப்படகு (ம) எந்திரப்படகு கட்டுதல், காற்றாலைகள் (ஆரல்வாய்மொழி), சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து மைதா தயாரித்தல், இந்திய அருமண் தொழிற்சாலை (மணவாளக்குறிச்சி), பிளாஸ்டர் தொழிற்சாலை இம்மாவட்டத்திலுள்ள முக்கிய தொழற்சாலைகள்.
மூன்றாம் நிலைத் துறை
உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு 132 அடி உயரச் சிலை 01.01.2000 அன்று குமரிமுனையில் கட்டப்பட்டது.
விவேகானந்தர் பாறை மற்றும் நினைவிடம் இம்மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு.
தமிழகத்தின் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம்.
வழிபாட்டிடங்கள்:  பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலையன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், முந்திரிதோப்பு வைகுண்டசாமி அய்யா, கோட்டாறு சவேரியார் கோயில். தக்கலை ஞானி பீர்முகமது மசூதி பாரம்பரிய மருத்துவங்களான சித்த வைத்தியம், ஆயுர்வேதம், வர்மக்கலைக்கு பெயர் பெற்றது.
சூரியோதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை இந்தியாவில் நேரடியாகப் பார்க்கக்கூடிய ஒரே இடம் கன்னியாகுமரி மட்டும்தான்.
தமிழகத்திலேயே இயற்கை ரப்பர் உற்பத்திச் செய்யும் மாவட்டம் இது.
வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்: கம்யூ னிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

 திருநெல்வேலி மாவட்டம்
வளம் மிக்க வண்டல் மண் பகுதியான இந்தப் பகுதி, பாண்டியர்கள் ஆட்சிக்குப் பிறகு சோழப் பேரரசின் முக்கிய நகரமாக மாறியது. பிறகு, விஜயநகரப் பேரரசு, நாயக்கர்கள், நவாப்கள், மாறி இறுதியில் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது.
தென்பாண்டி நாடு, முடிகொண்ட சோழ மண்டலம், டின்னவேலி, நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என அடுத்தடுத்து பெயர் மாறி, தற்போது 'திருநெல்வேலி’ என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளை கொண்டு 1790-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி 'திரு நெல்வேலி மாவட்டம்’  உருவானது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், மிளகு, தேயிலை, காப்பி, ரப்பர் போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
நெல்லையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் புகழ் பெற்றது.
தமிழக மாநில மரமான பனை மரங்கள் இம்மாவட்டத்தில் மிகுதி.
இரண்டாம் நிலைத் துறை
சிமென்ட் ஆலை (தாழையூத்து), சர்க்கரை ஆலை (வாசுதேவ நல்லூர்), காகித ஆலை (அம்பை மதுரா கோட்ஸ்) போன்றவை புகழ்பெற்ற தொழிற்சாலைகள்.
பத்தமடைப் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை.
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நிலைத் துறை
மிஷனரிகளால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளுக்குப் புகழ் பெற்ற ஊரான பாளையங்கோட்டை 'தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்’ எனப்படுகிறது.
சுற்றுலா தலங்கள் :  பாபநாசம் நீர்வீழ்ச்சி (பாண தீர்த்தம்), மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, குற்றாலம் (தென்னாட்டு ஸ்பா, சிவபெருமானின் சித்திர சபை), நெல்லையப்பர் கோயில் (சிவபெருமானின் தாமிர சபை), கிருஷ்ணாபுரம் (நாயக்கர் காலச் சிற்பங்கள்),   திருக்குறுங்குடி (நம்பியாண்டவர் கோயில்), முண்டந்துறை - களக்காடு புலிகள் பாதுகாப்பகம்,  கூந்தன்குளம் பறவைகள் புகலிடம், அரியகுளம் பறவைகள் புகலிடம்.
ஜூலை மாதம் குற்றாலத்தில் நடை பெறும் 'சாரல் விழா’ பிரபலம்.
பணக்குடியில் ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மும்பை வரை நீள்கிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்:
இம்மாவட்டத்தில் வந்து தங்கிய ராபர்ட் கால்டுவெல் ('டின்னவேலி சரித்திரம்’ எழுதியவர்), டி.கே.சிதம்பரநாத முதலியார், பூலித்தேவன், வாஞ்சிநாதன், புதுமைப் பித்தன், நீதிபதி ரத்தினவேல் பாண்டியன்.

 தூத்துக்குடி மாவட்டம்
இந்த மாவட்டம், கடல் வழி வாணிபத்துக்கும், முத்துக்குளிப்புக்கும் பல நூற்றாண்டுகளாக பேர் போனது.
பாண்டியர் ஆட்சியில் இருந்த போதுதான் இங்கு துறைமுகம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு சோழ மன்னர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சு நாட்டவர்களின் பிடியிலும் இந்தப் பகுதி இருந்தது.
கி.பி.1782-ல் டச்சு நாட்டவரிடம் இருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றி, கிழக்கு இந்திய கம்பெனியை ஆங்கிலேயர் நிறுவினர்.
1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சிதம்பரனார் மாவட்டமாக உருவாக்கப்பட்டு, பின்னர் 1997ல் தூத்துக்குடி மாவட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
2008, ஆகஸ்ட் 5-ம் தேதி, தமிழகத்தின் 10-வது மாநகராட்சியாக தூத்துக்குடி அறிவிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், சோளம், கம்பு, நிலக் கடலை, பருத்தி, வாழை போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
தமிழக மொத்த கம்பு உற்பத்தியில் சுமார் 35%க்கும் மேல் இம்மாவட்டத்தில் இருந்து உற்பத்தியாகிறது.
வாழை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய உப்பு உற்பத்தியில் 30%ஐயும், தமிழக உப்பு உற்பத்தியில் 70% ஐயும் தருபவை தூத்துக்குடி உப்பளங்களாகும். குஜராத்துக்கு அடுத்து தூத்துக்குடி இந்தியாவின் 2வது பெரிய உப்பு உற்பத்தி மையமாகும்.
முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமான இது, 'முத்து நகரம்’ என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி கடற்கரை மணலில் அணு கனிமத் தாதுக்கள் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலைத் துறை
ஸ்பிக் உரத் தொழிற்சாலை 1987ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப் பட்ட கனநீர் உற்பத்தி சாலை, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை, அனல் மின் நிலையம், குலசேகரப் பட்டினம் கடலலை மின் நிலையம் போன்றவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
இந்தியாவின் முதல் செயற்கை முத்து தூத்துக்குடியிலுள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மூன்றாம் நிலைத் துறை
சுற்றுலா தலங்கள் : திருச்செந்தூர் முருகன் கோயில், மணப்பாடு (தென்னிந்தியாவின் மியாமி எனப்படும் அழகிய கடற்கரை), கழுகுமலை, ஓட்டப்பிடாரம் (வ.உ.சி. பிறந்த ஊர்), எட்டயபுரம் (பாரதியார் மற்றும் உமறுப் புலவர் பிறந்த ஊர்), பாஞ்சாலங்குறிச்சி (வீரபாண்டியக் கட்டபொம்மன் கோட்டை) கயத்தாறு (கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்), நவதிருப்பதிகள் (திருவைகுண்டம், திருவரகுண மங்கை, திருப்புளியங்குடி, திருக்குளந்தை, திருத்தொலைவில்லி மங்கலம், தென் திருப்பேரை, திருக்கோளூர், திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குனேரி (எ) வானமாமலை).
வாஞ்சிநாதன் நினைவாக மணியாச்சி ரயில் நிலையம் 'வாஞ்சி மணியாச்சி சந்திப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டம்
பண்டைய காலத்தில் நாயக்கர்கள் மற்றும் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1985-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் (சிவகங்கை), காமராஜர் மாவட்டம் (விருதுநகர்), ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.  காமராஜர் மாவட்டம் பின்னர் 1997ம் ஆண்டு 'விருதுநகர் மாவட்டம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
முதனிலைத் துறை
நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள் போன்றவை முக்கிய வேளாண் பயிர்கள்.
ராஜபாளையம் நாய்கள் தேசிய அளவில் புகழ் பெற்றவை.
இரண்டாம் நிலைத் துறை
தீப்பெட்டி, பட்டாசு, அச்சுத் தொழில்களுக்குப்  புகழ்பெற்ற, 'குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப் படும் சிவகாசி இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சிவகாசி நகரத்தில் இந்தியாவின் மொத்த பட்டாசுத் தேவையில் 90% உற்பத்தி ஆகிறது.
இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 70% சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உற்பத்தி யாகிறது.
ஜெர்மனியிலுள்ள குட்டன்பர்க் நகரத்தை அடுத்து உலகிலேயே அதிக ஆஃப்செட் அச்சகங்கள் கொண்ட நகரமாக சிவகாசி திகழ்கிறது.
ஆலங்குளம் மற்றும் துலுக்கப் பட்டி சிமென்ட் ஆலைகள், டிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகள் இம்மாவட்டத்தில் உள்ளன.
பருத்தி ஆலைகள் நிறைந்த ராஜபாளையம் 'பருத்தி நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் நிலைத் துறை
'வியாபார நகரம்’ என்று அழைக்கப்படும் விருதுநகரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
விருதுநுகர், சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி போன்றவை முக்கிய வர்த்தக மையங்கள்.
சுற்றுலா தலங்கள்: ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில் (தமிழக அரசு சின்னமான கோபுரத்தைக் கொண்டது), ரமண மகரிஷி பிறந்த 'திருச்சுழி’, சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் (ஸ்ரீவில்லிபுத்தூர்), தமிழகத்தில், பாண்டியர்கள் கட்டிய 14 கோயில்களில் 10-வது கோயில் அய்யனார் கோயில், பிளவக்கல் அணை,  ஐயனார் நீர்வீழ்ச்சி, சவேரியார் ஆலயம், சித்தர் வாழ்வதாக நம்பப்படும் சதுரகிரி மலை போன்றவையும் இம்மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்.
எளிமையின் இலக்கணம், 'கிங் மேக்கர்’, பெருந்தலைவர், தமிழகத்தின் கல்விக் கண் திறந்தவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து, சிறப்பாகப் பணியாற்றியவர், இறப்புக்குப் பின் பாரதரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் எனப் பல சிறப்புகளைப் பெற்ற காமராஜர் பிறந்த மாவட்டம். விருதுநகரிலுள்ள அவரது வீடு 'காமராஜர் நினைவு இல்லம்’ ஆக அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம்
 தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம். பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இருந்து, பிறகு சோழர்களும் மீண்டும் பாண்டியர்களும் ஆண்டனர். விஜயநகர பேரரசு நாயக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது. பிறகு, நாயக்கர்களின் ஆதிக்கம் குறைந்ததும், மராட்டியர்களும் நிஜாம்களும் ஆட்சி புரிந்தனர்.
இந்தப் பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 1910-ம் ஆண்டு மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு இந்த மாவட்டம் உருவானது.
முதனிலைத் துறை
நெல், கம்பு, சோளம் முக்கியப் பயிர்களாகும். மிளகாய் சந்தை  (தமிழ்நாட்டில் மிகப்பெரிய சந்தை), தேங்காய் மொத்த வணிகத்திற்கும்  புகழ் பெற்றது.
தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சிப் பண்ணையும், பழத்தோட்டப் பண்ணைகளும் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
மீன்பிடித்தல், முத்துக்குளித்தல் இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்கள். அரசின் வேளாண்மைப் பள்ளியும், வேளாண்மைப் பண்ணையும் பரமக்குடியில் அமைந்துள்ளது.
'மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம்’ இந்தியாவின் முதல் கடலுயிரி காப்பகம்.
இரண்டாம் நிலைத் துறை
நெசவுத் தொழில் (பரமக்குடி), பருத்தி (கமுதி), பனையோலை பொருட்கள் (சித்தார்கோட்டை) போன்றவை சிறுதொழில்கள்.
சங்குகளை அறுத்து அணிகலன்கள் செய்தல், மீன்பிடித்தல், மண்பாண்டங்கள் செய்தல் போன்ற தொழில்களுக்கு கீழக்கரை துறைமுகம் பெயர்போனது.
மண்டபத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு முத்து நிறுவனம் செயற்கை முத்து தயாரிக்கிறது.
இராமேஸ்வரம் தீர்த்தம், தேங்காய், புளி, சரளைக்கல், சோழி, சங்கு, கடல் மீன், கடல் ஆமை, நண்டு, மீன் முதலியன இங்கிருந்து ஏற்றுமதி  ஆகும் முக்கிய பொருட்களாகும்.
மூன்றாம் நிலைத் துறை
1913இல் கட்டப்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமும் இரண்டாவது பெரிய கடல் பாலமுமாகும். இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் பாம்பனில் அமைந்துள்ளது.
இராமேஸ்வரம் (தென் இந்தியாவின் காசி) தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங் கங்களுள் ஒன்று இக்கோவிலில் உள்ளது.
ரோமானியர்களின் நாணயங்களும், மௌரியர் கால ஓவியங்களும், பானை ஓடுகளும் 1983 இல் அழகன்குளத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலைவாய்க் கரை என்று அழைக்கப்படும்  தொண்டி பாண்டியர்களின்  துறைமுகமாக விளங்கியது. யானைகளும் முத்துக்களும் அரபு நாடுகளுக்கு இத்துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க இடங்கள்
இராமேஸ்வரம், திருபுல்லாணி பெருமாள் கோயில், உத்திரகோச மங்கை, திருவாடானை, ஏர்வாடி தர்ஹா, ஓரியூர் கிறித்துவ தேவாலயம், நயினார் கோயில், ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி ராஜா அரண்மனை
குறிப்பிடத்தக்கவர்கள்: முத்துராம லிங்க சேதுபதி,   பாஸ்கர சேதுபதி, முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கமல்ஹாசன்.

 சிவகங்கை மாவட்டம்
 இது, பல நூற்றாண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. கலை நேர்த்தியோடு கட்டப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது சிவகங்கை சீமை.
மருதுபாண்டியர் வாழ்ந்த பூமியான இது, ராமநாதபுரத்தின் 7-வது அரசனாகிய ரகுநாத சேதுபதி ஆட்சியின் கீழ் இருந்தது. வேலுநாச்சியருக்குப் பிறகு மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஆங்கிலேயர் ஆட்சி செய்தனர்.
1985-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பிரிக்கப் பட்டபோது, 'பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம்’ உருவானது. பிறகு இதுவே 'சிவகங்கை மாவட்டம்’ என மாறியது.
முதனிலைத் துறை
நெல், வாழை, கரும்பு, (திருப்புவனம்) வேர்க்கடலை (சிங்கம்புணரி), வெற்றிலைக் கொடிக் கால்கள்(இளையான்குடி) முதலிய பயிர்களும் மானாவாரி நிலங்களில் மிளகாய், பருத்தி, வரகு, கொள்ளு போன்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
பிரான்மலையில்  மாம்பழம், பலாப்பழம், சீத்தாப்பழம், காய் கறிகள் அதிகம்  விளைகின்றன.
சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் சுண்ணாம்புக் கல், இரும்புக் கனிகள்(கானாடு காத்தான்), பழுப்பு நிலக்கரி(காரைக்குடி), வெள்ளைக் களிமண், கிராபைட் கனிமம், எஃகு களிமண் (நாட்டரசன் கோட்டை) போன்ற கனிமங்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. வள்ளல் பாரி வாழ்ந்த பறம்பு மலை பிரான்மலை யேயாகும்.
இரண்டாம் நிலைத் துறை
குடிசைத் தொழில்கள், செங்கற்கள் சூளை (மானாமதுரை), கைத்தறி நெசவு ஆலைகள், பாய்,கூடை முடைதல், பனை பொருட்கள் தயாரிப்பு, தச்சுத் தொழிற்சாலை, பனை ஓலையை கொண்டு பல்பொருள் செய்யும் நிலையங்கள், கடலை அரைக்கும் ஆலைகள் (சிங்கம்புணரி), கயிறு பின்னும் தொழில் போன்ற கைவினைத் தொழில்களும் மிகுதி. திருப்பாச்சி, அரிவாள் உற்பத்திக்கு பெயர் பெற்றது.
மூன்றாம் நிலைத் துறை
காரைக்குடி வியாபாரத் துறையிலும் முன்னணியில் திகழ்கிறது. பங்கு மார்க்கெட்டும் தங்கம், வெள்ளி, வைர வியாபாரமும் மிகுந்துள்ளது. காரைக்குடி பழம்பெரும் வீடுகளும், நாகரிக வசதி வாய்ந்த அரண்மனை போன்ற கட்டடங்களும் புகழ் பெற்றது. பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயில் புகழ் பெற்றது.
குறிப்பிடத்தக்கவர்கள்: மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், கணியன் பூங்குன்றனார், மாசாத்தியார், மாசாத்தனார் (சங்ககாலம்), பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கவியரசு கண்ணதாசன், வள்ளல் அழகப்ப செட்டியார், அண்ணாமலை செட்டியார், முத்தையா செட்டியார், திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார், எழுத்தாளர் தமிழ்வாணன், சுத்தானந்த பாரதி, வயலின் இசை வல்லுநர் குன்னக்குடி வைத்தியநாதன், சைவத் தமிழ் அறிஞர் குன்றக்குடி அடிகளார், எழுத்தாளரும் இயக்குனருமான கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் முத்துலிங்கம்.

 மதுரை மாவட்டம்
 சங்க காலத்தில் மிகவும் பெருமை வாய்ந்த பழமையான நகரம். புராண காலத்தில் 'கடம்ப வனம்’ என்று அழைக்கப்பட்டது.  'கூடல்’ என்பது இதன் பழைய பெயர். இதற்கு 2500 ஆண்டு கால வரலாறு உண்டு.  மருத மரங்கள் நிறைந்த ஊர் ஆதலால் மருதை என்ற பெயர் பெற்றது. 'கோயில் நகரம்’ எனவும் 'தமிழ்நாட்டின் ஏதென்ஸ்’ எனவும் 'தூங்கா நகரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ்ச் சங்கங்களின் இருப்பிடமான மதுரை, பண்டைய காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரமாக விளங்கியது. புற நானூற்றில் மதுரை 'தமிழ்கெழு கூடல்’ என்றும், பரிபாடலில் 'தமிழ் வேலி’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிறகு, சோழர்கள் வசம் இருந்த மதுரையை மீண்டும் கைப்பற்றினார்கள் பாண்டியர்கள். விஜயநகர பேரரசின் கீழ்  இருந்த மதுரையை, பிறகு நாயக்கர்கள் ஆண்டார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் 1786ம் ஆண்டு மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1996ல் மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
முதனிலைத் துறை
நெல், நிலக்கடலை, சூரியகாந்தி, எள் மற்றும் மல்லிகை போன்றவை இம்மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பயிர்களாகும்.
நவரத்தினங்கள், கிரானைட், சுண்ணாம்புக் கற்கள் போன்றவை இம்மாவட்டத்தின் முக்கியக் கனிமங்களாகும்.
இரண்டாம் நிலைத் துறை
பஞ்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், கதர் நெசவு உற்பத்தி, பனைபொருட்கள் தயாரிப்பு போன்றவை இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில்கள்.

மூன்றாம் நிலைத் துறை சுற்றுலா தலங்கள்
திருப்பரங்குன்றம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் (65,000 சதுர மைல் பரப்பு கொண்டது), ஆயிரங்கால் மண்டபம் (ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆயிரம் தூண்களைக் கொண்டது),  பழமுதிர்ச் சோலை, திருமலை நாயக்கர் மஹால் (1636ல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. தங்கவிலாசம், சொர்க்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது. மெட்ராஸ் கவர்னர் நேப்பியர் பிரபுவால் 1866-72ல் சீரமைக்கப்பட்டது), காந்தி மியூசியம் (காந்தி மேலாடையை துறந்த இடம்) ஆகியவை மதுரை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களாகும்.
ஜில் ஜில் ஜிகர்தண்டா, பருத்திப் பால் மதுரையின் ஃபேவரைட்.
மணக்கும் மல்லிகைக்கும்,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும் மதுரை பெயர் பெற்றது.
சித்திரைத் திருவிழா, இந்த மாவட்டத்தின் சிறந்த அடையாளங் களில் ஒன்று.
மதுரை அவனியாபுரத்தில் ஏர்போர்ட் அமைந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் கிளை மதுரையில் செயல்படுகிறது.
குறிப்பிடத்தக்கவர்கள்
பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி), 'மதுரை காந்தி’ என்.எம்.ஆர்.சுப்பராயன், வைத்தியநாத அய்யர் (ஆலய நுழைவுப் போராட்டம்)

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் - மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

* தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து -  352

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் - ஜனாதிபதி

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

* தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

* 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

* ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து -  356

*முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

* முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

* நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து-  360

* நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

* நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

* நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

* 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

* நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் - ஜனாதிபதி

* நிதிஆணையத்தின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

* நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் - 5 பேர்

* நிதி ஆணையகத்தின் தலைவர் - ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

* நிதி ஆணையகம் என்பது - இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

* முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1951

* முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. நிகோய்

* பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் - கே.சி. பந்த்

* பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் - ஏ.எம். குஸ்ரோ

* நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.


தேர்தல் ஆணையம்

* தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

* தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் 324

* தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

* தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

* தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து  324 (5)

* தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

* தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

* ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

* தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

* புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையகம்.

* முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையகம்.

* கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

* திட்டக்குழுவின் தலைவர் - பிரதமர்

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் - மாநில முதலமைச்சர்கள்

* திட்டக்குழு என்பது - ஒரு ஆலோசனைக் குழு

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் - பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு - திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் - பிரதமர்

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு - தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும்.

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான்.

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன.

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய - மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

* இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

* ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.